உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 28). பா.ம.க. இளைஞர்அணி நிர்வாகியான இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டினார்.
குன்னத்தூர் கிராமம் அரசு பள்ளி அருகில் வந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் விக்னேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லேசான காயத்துடன் மணிகண்டன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு விக்னேசின் மனைவி மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து விக்னேசின் உடலை பார்த்து கதறி அழுதனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் பஸ்சின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் விக்னேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.