தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர். கல்லூரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி மர்ம மரணம் காரணமாக தனியார் பள்ளி சூறையாடப்பட்டு பயங்கர கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து பிற மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என போலீசார் கருதினர். அதன்படி மாணவர்கள் போராட்டத்தில் இறங்குவதை தடுக்க வேலூர் மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மாவட்டத்தில் உள்ள 32 அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு கல்லூரி வாசலில் 5-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல பள்ளி பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு
இந்த நிலையில் தமிழ்நாடு தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த வன்முறை சம்பவத்திற்கும், போலீசார் தாக்கப்பட்டதற்கும், மாணவியின் இறப்பிற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை எங்கள் சங்கத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். தி.மு.க. ஆட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுபோன்ற தாக்குதல் நடத்தும் தீய சக்திகளுக்கு எதிராக குற்றம் பாயும் வண்ணம் சட்டங்கள் இயற்ற வேண்டும். தனியார் பள்ளிகளுக்கும், மாணவ -மாணவிகள், ஆசிரியர் மற்றும் பள்ளி சொத்துகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 40 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கவில்லை என கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறினர்.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. என மொத்தம் 318 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 17 பள்ளிகள் மூடப்பட்டிருந்தது என்றனர்.