அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஈரோடு மாவட்டத்தில் நேற்று துறை சார்ந்த ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார். அப்போது மாவட்டத்தில் உள்ள சாய, சலவை மற்றும் தோல் தொழில் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் ஈரோடு மாவட்ட தோல் பதனிடுவோர் சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்கள் நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
கழிவுகளை கடலில் கலக்க வேண்டும்
அப்போது அவர்கள் கூறியதாவது:-
தோல் பதனிடும் தொழில் மிகவும் நசிந்து வருகின்றது. பதனிடப்படும் தோல் 75 சதவீதம் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. உள்ளூர் தேவை என்பது மிகவும் குறைவாகும். வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் ஆதிக்கத்தை சமாளிக்க முடியாத நிலையும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகளில் தோல் உற்பத்தி 10 சதவீதம் தான் உள்ளது. ஏராளமானோர் வேலை இழந்து வருகின்றனர். ஈரோட்டில் 30-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 20 தொழிற்சாலைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 200 தொழிற்சாலைகள் செயல்படுகின்றது. இத்துறையின் முக்கிய பிரச்சினையாக இருப்பது சுற்றுச்சூழல் தான். எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட்டன என்றனர். இதுபோல் சாய, சலவை பட்டறை சார்பிலும் கழிவு நீரை குழாய் மூலம் கடலில் கலக்கும் திட்டம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
சாத்தியம் இல்லை
அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறும்போது, கழிவுகளை குழாய் மூலம் கடலில் கலக்கும் திட்டம் சாத்தியம் இல்லாதது. எனவே அதை விட்டு மாற்று வழிகள் குறித்து யோசிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், தொழிற்சாலைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உங்களுக்கு ஒத்துழைப்பாக இந்த அரசு இருக்கும் என்றார். மேலும், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்தும் அமைச்சர் கூறினார். மத்திய-மாநில அரசுகளுடன், தொழிற்சாலை உரிமையாளர்களும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அப்போது ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. பேசும்போது, பொது சுத்திகரிப்பு நிலையம் என்பது மிகப்பெரிய திட்டம். அதை அமைப்பதில் அரசு முழுமையாக உதவி செய்ய வேண்டும். அரசு அவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்றார்.
பின்னர் பேசிய அமைச்சர் மெய்யநாதன், இதுபற்றிய முழுமையான திட்டம் தீட்டப்படும். கடலில் கழிவுகளை கலப்பது என்பது சாத்தியமில்லாதது. ஒரே வழி ஒருங்கிணைந்த பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதுதான். அதை எப்படி அமைப்பது என்று ஒரு திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். நீங்களும் நல்ல திட்டங்கள் இருந்தால் அதை என்னிடம் கொடுங்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கலந்து பேசி உரிய நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றார்.