தமிழக செய்திகள்

வன்னியருக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை - அமைச்சர் பி.தங்கமணி வீட்டில் நடைபெற்றது

வன்னியருக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைத்து, அ.தி.மு.க. - பா.ம.க. இடையே கூட்டணி பேச்சுவார்த்தை, அமைச்சர் பி.தங்கமணி வீட்டில் நேற்று நடைபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்தத் தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

முதல் கட்டமாக எந்தெந்த கட்சிகள், எந்த கூட்டணியில் இருக்கின்றன என்பதை உறுதி செய்ய வேண்டியதுள்ளது. அதன் பின்னர் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தப்படும். இந்தநிலையில் வன்னிய சமுதாயத்தினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

எனவே சாதி வாரி கணக்கெடுப்புக்கு நடத்துவதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட்டார். ஆனாலும் வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதில் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், இடஒதுக்கீடு அளிக்கப்பட்டால் மட்டுமே அ.தி.மு.க. கூட்டணியில் தொடர முடியும் என்று பா.ம.க. அறிவித்தது.

தனி இடஒதுக்கீட்டுக்கு பதிலாக வன்னியர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன் பின்னர் பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாசிடமும் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்பட கட்சி நிர்வாகிகள் சிலர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

இந்தநிலையில் 3-ந் தேதி (நேற்று) இடஒதுக்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அக்கட்சி தரப்பில் கூறப்பட்டது. இந்தக் கூட்டம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி வீட்டில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர். அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பா.ம.க. தரப்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள் ஏ.கே.மூர்த்தி, தீரன், வேலு, வக்கீல் பாலு, வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த அருள்மொழி ஆகியோர் பங்கேற்றனர். நேற்று காலை 10.45 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் பிற்பகல் 1.45 மணிவரை 3 மணி நேரம் நீடித்தது.

இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கட்சிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. வன்னியர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீட்டை தேர்தல் அறிக்கையில் வெளியிட இருப்பதாக அ.தி.மு.க. உறுதி அளித்ததாகத் தெரிகிறது. தற்போது நடக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரிலோ அல்லது 22-ந் தேதிக்கு மேல் கூட இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலோ, இடஒதுக்கீடு தொடர்பாக அரசு ஏதாவது ஒரு வகையில் உறுதி அளிக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும், பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளை அளிக்க தயார் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. இதில் 29 தொகுதிகள் வட மாவட்டங்களிலும் 2 தொகுதிகள் தென்மாவட்டங்களிலும் தரப்படுவதாக அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தென்மாவட்டங்களில் தங்களுக்கு தொகுதிகள் தேவையில்லை என்றும் அதை வடமாவட்டங்களில் தர வேண்டும் என்றும் பா.ம.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அ.தி.மு.க. தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது

எனவே இதில் முடிவு எட்டப்படாமல் நேற்றைய கூட்டம் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனடியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றனர். அங்கு முதல்-அமைச்சருடன் அவர்கள் இதுபற்றி ஆலோசனை மேற்கொண்டனர்.

பா.ம.க. நிர்வாகிகளும் தங்களின் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனை செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு