பெரம்பூர்,
சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டிருந்த கொடுங்கையூர் போலீசார், அந்த வழியாக வந்த வியாசர்பாடி புதுநகரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான அப்துல்ரஹீம்(வயது 21) என்பவர் முககவசம் அணியாமல் வந்ததாக அபராதம் விதித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸ்காரரை தாக்கியதாக அப்துல்ரஹீமை கைது செய்த போலீசார், அவரை போலீஸ் நிலையத்தில் நிர்வாணமாக்கி விடிய விடிய தாக்கியதாக போலீஸ் கமிஷனரிடம் அவர் புகார் அளித்தார். அதன்மீது நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு ஏட்டு பூமிநாதன், போலீஸ்காரர் உத்தரகுமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அப்போது பணியில் இருந்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜன், எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நசிமா மற்றும் போலீஸ்காரர் ஹேமநாதன் ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் கமிஷனர் உத்தரவிட்டார்.
9 பேர் மீது வழக்கு
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் சட்டக்கல்லூரி மாணவன் அப்துல் ரஹீமை இரவு முழுவதும் நிர்வாணமாக்கி குழாய் மற்றும் பூட்ஸ் காலால் அவரது மார்பில் எட்டி உதைத்து காயப்படுத்தியும், பீரோவில் தள்ளி முகத்தில் தையல் போடும் அளவுக்கு காயப்படுத்தியதும், தகாத வார்த்தைகளால் பேசியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் பெண் இன்ஸ்பெக்டர் நசீமா, ஏட்டு பூமிநாதன், போலீஸ்காரர்கள் உத்தரகுமார், ஹேமநாதன், சத்யராஜ், ராமலிங்கம், அந்தோணி மற்றும் 2 பேர் என 9 பேர் மீது 3 பிரிவின் கீழ் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு
இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வியாசர்பாடியை சேர்ந்த அப்துல் ஹரீமின் மகன் அப்துல் ரஹீம், கொடுங்கையூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர்களால் தான் தாக்கப்பட்டதாக அளித்த புகார் குறித்து, சென்னை வடக்கு உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேற்படி புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.