வாணியம்பாடி
உதயேந்திரத்தில் பள்ளிக்கட்டிடம் கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 2-வது நாளாக போராட்டம் நடந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. கட்டிடம் கட்டுவதில் சிக்கல் எழுந்துள்ளதால் ரேஷன்கடை கட்டிடத்தில் வகுப்புகள் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல்
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் ரூ.72 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்ட முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு கடந்த 1-ந் தேதி அடிக்கல் நாட்டினார். இதனை எதிர்த்து உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் உள்ள கொல்லகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் குமார் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் அங்கு பணிக்கு வந்த பொக்லைன் எந்திர வாகனத்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் நேற்று முன்தினம் பணிகள் நிறுத்தப்பட்டது.
இருப்பினும் மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் நேற்று சம்பந்தப்பட்ட இடத்தில் மீண்டும் பணிகள் தொடங்கியது. அப்போது அங்கு வந்த கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இரண்டாவது நாளாக பள்ளி கட்டிடம் கட்டும் பணியை நிறுத்தப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா போலீசார் இது தொடர்பாக உரிய அதிகாரிகளும் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அவர்களை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் உள்ள இந்த தொடக்கப் பள்ளியில் 350 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் தற்போது அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையில் மாணவர்களை அமர வைத்து தற்போது வகுப்புகள் நடத்தும் நிலையை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளி கட்டிடம் கட்ட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பேரூராட்சி நிர்வாகத்தினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.வாணியம்பாடி அருகே பள்ளி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக போராட்டம்