சென்னை,
திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்த தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு தடையில்லை என்று உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கில் பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில், இந்த மனுக்கள் எல்லாம் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடியும் வரை தமிழகத்தில் எந்த ஒரு போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடைபெறக்கூடாது. போராட்டம் நடத்துவது அல்லது ஒரு இடத்தில் ஒன்று கூடுவது போன்ற செயல்களுக்கு விதிக்கப்பட்ட தடை அனைவருக்கும் பொருந்தும். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். இந்த வழக்கை வருகிற ஏப்ரல் 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.