தமிழக செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் திட்டமிட்டபடி இன்று விண்ணில் ஏவப்படும்

பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் திட்டமிட்டபடி இன்று விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

இஸ்ரோ தலைவர் கிரண் குமார், பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் கார் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் திட்டமிட்டபடி சிறப்பாக நடந்து வருகிறது. இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி உள்ளது. இந்த ராக்கெட் 30 செயற்கைகோள்களை விண்ணுக்கு சுமந்து செல்கிறது.

பேரிடர் மேலாண்மை, வான்வெளி மற்றும் கடல் போக்குவரத்து, நகர்புற கட்டமைப்பு, நில அளவை, வனப்பகுதி கண்காணிப்பு உள்பட அரிய செயல்பாடுகளுக்கு இந்த செயற்கைகோள்கள் பயன்படும். திட்டமிட்டபடி இன்று(வெள்ளிக்கிழமை) விண்ணில் ஏவப்படும்.

ஏற்கனவே அனுப்பப்பட்ட மங்கள்யான் 19-ந்தேதியுடன் வெற்றிகரமாக 1,000 நாட்களை கடந்து உள்ளது. அது இங்கிருந்து அனுப்பும்போது 6 மாதத்துக்காக திட்டமிடப்பட்டு தான் அனுப்பப்பட்டது. ஆனால் தற்போது 1,000 நாட்களை கடந்து சாதனை படைத்து உள்ளது.

இன்னும் அது மிக சிறப்பான முறையில் இயங்குகிறது. பல அரிய வகை புகைப்படங்கள், தகவல்களை அங்கிருந்து அனுப்பிக்கொண்டு இருக்கிறது. இது மிகப்பெரிய சாதனையாகும். மேலும் நமது விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.