தமிழக செய்திகள்

கூலித்தொழிலாளியை அடித்துக் கொன்றதாக கூறி வன அலுவலர் மீது பொதுமக்கள் தாக்குதல்

செங்கம் அருகே கூலித்தொழிலாளியை அடித்து கொன்றதாக கூறி வன அலுவலரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதோடு மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்தனர்.

செங்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேல்புழுதியூர் பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது 30), கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை நண்பர்களுடன் மேல்புழுதியூர் வனப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மணல் எடுத்து கொண்டு மாட்டு வண்டியில் வந்தார். அப்போது வனத்துறை அதிகாரியின் கார் வந்ததால் அவரது நண்பர்கள் ஓடி விட்டனர்.

கார் வனப்பகுதியில் செல்வதையும், திரும்பியதையும் அந்த பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் பார்த்து உள்ளனர். மாடு மேய்த்து கொண்டு இருந்தவர்கள் வனத்துறை அதிகாரியின் கார் வந்த பகுதி வழியாக சென்றபோது மாட்டு வண்டியின் அருகில் திருமலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அங்கிருந்தவர்கள் செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே திருமலை உயிரிழந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

திருமலையை வனத்துறையினர் தான் அடித்து கொன்று இருப்பார்கள் என்று கருதிய அவர்கள் போலீசாரை முற்றுகையிட்டனர். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வனத்துறை அலுவலர்கள் 2 பேர் அங்கு வந்தனர். அவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்தபோது ஒருவர் தப்பிவிட்டார்.

தாந்தவராயன் என்பவர் மட்டும் பொதுமக்களின் பிடியில் சிக்கினார். பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டனர். மேலும் பொதுமக்கள் வனத்துறை அலுவலர்கள் வந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தினர். உடனே, போலீசார் தீயை அணைத்தனர்.

போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி திருமலையின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.