நெய்வேலி
மயங்கி விழுந்து சாவு
நெய்வேலி அடுத்த தெற்கு வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(வயது 54). இவர் என்.எல்.சி. நில எடுப்பு அலுவலகத்தில் இன்கோசர்வ் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 1-ந் தேதி பணியில் இருந்த சேகர், திடீரென மயங்கி விழுந்தார். உடனே சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மீண்டும் சேகரை, அவரது குடும்பத்தினர் என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சேகர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
முற்றுகை
இந்நிலையில் சேகர் மகனுக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க கோரியும் சேகரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என்.எல்.சி. நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த என்.எல்.சி. துணை பொது மேலாளர் சிவகுமாருடன், அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் சின்ன.ரகுராமன், தி.மு.க. பிரமுகர் பன்னீர்செல்வம், வேல்முருகன் மற்றும் ஊர் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
அப்போது துணை பொது மேலாளர் சிவகுமார், இதுகுறித்து என்.எல்.சி. உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சேகர் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.