அரசு அருங்காட்சியகம்
புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகம் கடந்த 1910-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழகத்தின் 2-வது பெரிய அருங்காட்சியகமாக கருதப்படுகிறது. பழமையான கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த அருங்காட்சியகத்தில் தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கல் சிலைகள், கனிமங்கள், மரப் படிமங்கள், உலர் தாவரங்கள், மூலிகைப்பொருட்கள், கூத்து கலைப்பொருட்கள், பனையோலைகள், அருங்காட்சியக வெளியீடுகள், உலோகப் படிமங்கள், கலைப்பொருட்கள், தொல் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், கல் வகைகள், தொல்லுயிரி படிமங்கள், கனிமங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
புனரமைப்பு பணிகள்
இந்த அருங்காட்சியகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது. இந்த புனரமைப்பு பணிக்காக ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட சில பொருட்கள் சென்னைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. கல்சிலைகள் அருங்காட்சியகத்தில் மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது அருங்காட்சியகத்தில் போதுமான இடவசதி இல்லாமல் காணப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அத்துறையை சார்ந்த அதிகாரிகள் இந்த அருங்காட்சியகத்தை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போதுமான இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும், பழமையான கட்டிடத்தில் இயங்கி வருவதாலும், வாகனங்கள் நிறுத்த போதுமான இடவசதி இல்லாதது, நெருக்கடியான இடத்தில் அமைந்திருப்பது குறித்து ஆலோசித்தனர்.
5 ஏக்கர் நிலம்
இந்த நிலையில் அருங்காட்சியகத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கொடுத்தால் அதில் அருங்காட்சியகத்தை புதிதாக அடிப்படை வசதிகளுடன் கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆலோசனை நடைபெற்றுவருவதாக அருங்காட்சியக வட்டாரத்தில் தெரிவித்தனர். புதிதாக வேறு இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் போது பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையிலும், வாகனங்கள் நிறுத்துமிட வசதியுடன், அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் பார்வையிடும் வகையிலும் கட்டப்படும் என தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் நிலம் ஒதுக்கி கொடுத்தால் அடுத்தக்கட்ட பணிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.