கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கினை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். இது சம்பந்தமான அறிக்கை தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி நேரில் ஆஜராக ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நிர்வாகிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஏராளமான புகார்களின் அடிப்படையிலும், புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், அதற்கு கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

உறுப்பினர் ஒருவரை கட்சியில் இருந்து நீக்கிய விவரத்தை கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது அவதூறு குற்றமாகாது என்றும், இதை கருத்தில் கொள்ளாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தங்களுக்கு சம்மன் அனுப்பியது தவறு என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக நாளை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதால் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நீதிபதி நிர்மல்குமார் முன் முறையிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் வழக்குகள் வெள்ளிக்கிழமை தான் பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார். அதேசமயம், விசாரணை நீதிமன்றத்தில் ஏதேனும் எதிர்மறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அப்போது ஐகோர்ட்டை அணுகலாம் என நீதிபதி அனுமதியளித்தார். கோரிக்கை நிராகரிப்பால் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஓபிஎஸ், இபிஎஸ் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்