செங்குன்றம்,
தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை(பப்ஜி) விளையாடி, அதன் மூலம் ஆபாசப்பேச்சு, பண மோசடி ஆகிய வழக்குகளில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டவர் `பப்ஜி' மதன். தற்போது இவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவருடைய மனைவி கிருத்திகா, அடிக்கடி புழல் சிறைக்கு வந்து மதனை பார்த்து விட்டு செல்வது வழக்கம். அப்போது மதன், சிறையில் தனக்கு தனி அறையும், சொகுசாக இருக்க வசதிகளும் ஏற்படுத்தி தரவேண்டும் என மனைவியிடம் கேட்டார். கிருத்திகா அடிக்கடி புழல் சிறைக்கு வந்து சென்றதால் அவருக்கு புழல் சிறை அதிகாரி செல்வம் என்பவருடன் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டது.
ரூ.3 லட்சம் லஞ்சம்
அந்த பழக்கத்தின்பேரில் சிறை அதிகாரி செல்வத்திடம், புழல் சிறையில் எனது கணவர் மதனுக்கு சொகுசு வாழ்க்கை அமைத்து தர வேண்டும் என கிருத்திகா கூறினார். அதற்கு செல்வம், சிறையில் அவருக்கு சகல வசதிகளையும் அமைத்து தர வேண்டும் என்றால் ரூ.3 லட்சம் தரவேண்டும். அதை உயர் அதிகாரிகளுக்கு கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கை ஏற்படுத்தி தருகிறேன் என்றார். ஆனால் ரூ.3 லட்சம் கேட்டதால் அதை கொடுக்க விரும்பாத கிருத்திகா, சிறை அதிகாரி தன்னிடம் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டு பேரம் பேசுவதை செல்போனில் ஆடியோவாக பதிவு செய்து, அதனை சிறைத்துறை உயர் அதிகாரியிடம் போட்டு காண்பித்தார்.
பணியிடை நீக்கம்
இதற்கிடையில் பப்ஜி மதனுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுப்பதாக கூறி அவருடைய மனைவி கிருத்திகாவிடம் ரூ.3 லட்சம் கேட்டு சிறை அதிகாரி பேரம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் அதற்கு முதற்கட்டமாக ரூ.25 ஆயிரத்தை கூகுள் பே மூலம் செலுத்தியதற்கான ஆதாரமும் சமூக வலைளதங்களில் வெளியானது. அந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதன்படி புழல் சிறை அதிகாரி செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டார்.