தமிழக செய்திகள்

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தேவர் தங்கக்கவசம் ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது- துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தேவர் தங்கக்கவசம் ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

மதுரை

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தேவர் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் நாளை மறுநாள் தேவர் ஜெயந்தி விழா தொடங்குகிறது. இந்த நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் 13.5 கிலோ தங்க கவசத்தை கடந்த 2014-ம் ஆண்டு அணிவித்தார்.

ரூ.4.5 கோடி மதிப்பிலான இந்த தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவின்போது அ.தி.மு.க. சார்பில் முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது. ஜெயந்தி விழா முடிந்ததும் தங்க கவசம் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.

இந்த தங்க கவசத்தை எடுக்கும் பொறுப்பாளராக பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிட அறங்காவலர் மற்றும் அ.தி.மு.க.வின் பொருளாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை அ.தி. மு.க.வின் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தங்க கவசத்தை வங்கி பெட்டகத்தில் இருந்து எடுத்து தேவர் நினைவிட நிர்வாகிகளிடம் ஒப்படைத்து வந்தார்.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. வில் பிளவு ஏற்பட்டது. அ.தி.மு.க. பொருளாளர் பதவியில் நிலவி வரும் குழப்பம் காரணமாக தேவரின் தங்க கவசத்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தங்க கவசத்தை பெறுவதற்காக மதுரை அண்ணாநகரில் உள்ள அரசு வங்கிக்கு இன்று காலை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனி வாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வந்தனர்.

அதன் பின்னர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வங்கிக்கு வந்தார். இவர்கள் உள்ளே சென்ற பிறகு வங்கியின் கதவுகள் மூடப்பட்டது. வங்கி முன்பு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர்.

சிறிது நேரத்தில் தினகரன் ஆதரவாளர் மேலூர் சாமி தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். அவர் வங்கியின் மற்றொரு வாசல் வழியாக உள்ளே சென்றார். ஓ.பன்னீர்செல்வம், தினகரன் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அப்போது மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் ஜெயபால் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் சின்னம்மா வாழ்க... தினகரன் வாழ்க... என்று கோஷமிட்டப்படி ஊர்வலமாக வந்தனர். இதற்கு எடப்பாடி பழனி சாமி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து எதிர் கோஷமிட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

வங்கி முன்பு இரு அணிகளை சேர்ந்தவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். மோதல் ஏற்படாத வண்ணம் அவர்களை தனித்தனியாக போலீசார் அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது.

இதனால் தங்கக் கவசத்தை யாருக்கு வழங்குவது என்ற பிரச்னையால் சுமார் 5 மணி நேரம் இழுபறி நீடித்து. முடிவில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தங்கக் கவசத்தை வங்கி நிர்வாகம் ஒப்படைத்தது. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அதனை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைப்பார். பின்னர் தங்கக் கவசம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அணிவிக்கப்படும்.

இது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அப்போது அவர் கூறியதாவது;-

தேவர் தங்கக்கவசத்தை பாதுகாக்க ஜெயலலிதா என்னை பொறுப்பாளராக நியமித்தார் .தேவர் தங்கக்கவசம் வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தேவர் தங்கக்கவசம் ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க வங்கிக்கு கடிதம் அளித்தோம்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...