சென்னை,
தமிழகத்தில் வரும் 23-ந் தேதி (வியாழக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி இதுவரை 3 முறை தமிழகம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்து 15-ந் தேதி நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 18-ந் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேசுகிறார். இதில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
அதேபோல், ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டத்தை நாளை மறுநாள் (15-ந் தேதி) சேலத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில், பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ராகுல் காந்தி தரப்பில் இருந்து சாதகமான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தி.மு.க. தலைமை அதிருப்தியில் இருக்கிறதாம்.
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தபோதே, தி.மு.க. - காங்கிரஸ் இடையே பிரச்சினை எழுந்தது. இதனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய காங்கிரஸ் தலைமை பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இதற்கு ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில், அவரது தாயாரான சோனியாகாந்தி இதற்கு மறுப்பு தெரிவித்தாராம். அதன்பின்னரே, தி.மு.க.வுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வருவதால், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, புதுச்சேரி தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே நாளில் பிரசாரத்திற்கு சென்றபோதும், ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை. வெவ்வேறு நேரத்தில் பிரசாரம் செய்தனர். கேரள தேர்தல் பிரசாரத்திற்காக செல்ல, சென்னை மற்றும் கோவைக்கு ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வந்தபோதும்கூட பிரசாரம் எதுவும் மேற்கொள்ளவில்லை.
தற்போது, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், ராகுல்காந்தி பிரசாரத்திற்கு வருவார் என்று கூறிவந்தாலும், மற்றொரு மேலிட பொறுப்பாளரான முகுல் வாஸ்னிக் அதை உறுதிப்படுத்தவில்லை. அதனால், ராகுல்காந்திக்கு நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் மூலம் அழைப்பு விடுக்க தி.மு.க. தலைமை முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.