சென்னை,
கொரோனா நோய்த்தொற்று நாடு முழுவதும் தீவிரம் அடைந்து வருகிறது. நோய் பாதிப்பின் சூழலை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பல மாநிலங்களில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதன்படி, மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் பயணிகள் இ-பாஸ் என்கிற அனுமதி கடிதம் பெற்று பயணிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.
தெற்கு ரெயில்வேக்குட்பட்ட பகுதிகளான சென்னைக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து ரெயில்கள் வந்து செல்கின்றன. அப்படி வரும் பயணிகள் கண்டிப்பாக இ-பாஸ் அனுமதி பெற்று தான் வர வேண்டும். ஆனால் அரசின் உத்தரவுப்படி, அவ்வாறு இ-பாஸ் அனுமதி கடிதம் பெற்று யாரும் பயணிப்பது இல்லை என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும், அதுபோல பயணிக்கும் பயணிகளிடம் முறையாக சோதனை செய்யப்படுகிறதா? என்று கேட்டால், அதுவும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடம் அப்படி எதுவும் சோதனை செய்து, இ-பாஸ் அனுமதி கடிதம் பெறாமல் பயணித்தவர்கள் எத்தனை பேர் என்ற தகவல் இருக்கிறதா? என்று அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசின் உத்தரவுப்படி அவ்வாறு பரிசோதிக்க வேண்டும் என்றால் ரெயில்வேத்துறை அதிகாரிகள் மட்டும் போதாது. அந்தந்த அரசின் சுகாதாரத்துறை மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பணியில் ஈடுபட்டால் தான் அது சாத்தியப்படும் என்றனர்.
ஏற்கனவே தமிழகம் கொரோனா நோய்த் தொற்றில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இப்படி அரசின் உத்தரவை பின்பற்றாமல், அலட்சியம் காட்டினால், நோய்த் தொற்றின் தாக்கம் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும். எனவே இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.