சென்னை,
சென்னை,கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனையில் தற்போது 52 மெட்ரோ ரெயில்களை பராமரிக்கப்பட்டு வருகிறது. ரெயில்கள் நாளுக்கு நாள் இயக்கப்பட்டு பழையதாகி, அடிக்கடி பராமரிப்பு தேவைப்படும் போது தான் 2-வது பணிமனை தேவைப்படுகிறது. அதேபோல், சென்னையில் 2-ம் கட்டமாக 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதைகளுக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 2026-ம் ஆண்டு பணிகள் நிறைவடையும் போது கூடுதலாக ரெயில்கள் இந்தப்பாதையில் இயக்கப்படும்.
இதனை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோயம்பேடு பணிமனையை தொடர்ந்து தற்போது திருவொற்றியூர் அடுத்த விம்கோநகரில் உயர்த்தப்பட்ட பாதையில் பணிமனை ஒன்றை பிரமாண்டமான முறையில் அமைத்து வருகிறது.
உயர்த்தப்பட்ட பாதையில் பணிமனை
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
திருவொற்றியூர் விம்கோநகரில் ரூ.2 ஆயிரத்து 300 கோடி மதிப்பில் 3 ஏக்டேர் பரப்பளவு கொண்ட நிலத்தில் 15 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பகுதியில் 12 ரெயில்கள் நிறுத்தும் பாதை, 3 ஆய்வு பாதைகள், ஒரு அவசர பழுதுபார்க்கும் பாதை என 16 ரெயில் பாதைககளுடன் உயர்த்தப்பட்ட பாதையில் பணிமனை அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
16 தண்டவாளங்கள்
வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை உள்ள 9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட முதல் கட்டத்தின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக திருவொற்றியூர் அடுத்து உள்ள விம்கோ நகர் பணிமனை அமைக்கப்பட்டு வருகிறது.
விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் 12 மீட்டர் உயரப்பாதையில், நிலத்தில் இருந்து 1,161 தூண்கள் தாங்கி நிற்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ரெயில்களை பராமரிக்கவும் நிறுத்தவதற்காகவும் உயர்த்தப்பட்ட பாதையில் பணிமனை அமைக்கப்பட்டு உள்ளது. 4 நிலைகளில் வாகன நிறுத்தும் இடமும் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 600 மீட்டர் இணைப்புடன் கூடிய நடைபாதை விம்கோ நகர் ரெயில் நிலையத்தை நோக்கி செல்லும் பிரதான பாதையுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
பணிமனையினைச் சுற்றி 7.5 மீட்டர் அகலமுள்ள உள்வட்ட சாலை, மழை நீர் வடிகால் மற்றும் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த் தொட்டி ஆகியவையும் கட்டப்பட்டு உள்ளது. பணிமனைக்கு அருகில் 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு வாகன நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. 1,055 சதுர மீட்டர் பரப்பளவில் ரெயிலைச் சுத்தப்படுத்தும் தானியங்கி நிலையமும் அமைக்கப்பட்டு உள்ளது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் இந்தப்பணிமனை அமைக்கும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20 மாடி அடுக்குமாடி குடியிருப்பு
மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு டிக்கெட் மூலம் இல்லாமல் பிற வழிகளில் வருவாயை பெருக்குவதற்காக, விம்கோ நகர் பணிமனையின் மேல் 60 மீட்டர் உயரத்தில் 20 மாடியில் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது அலுவலக கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
இது கடற்கரையில் இருந்து 600 மீட்டர் தூரத்தில் அமைய இருப்பதால், கடற்பார்வை குடியிருப்பு என்றும் அழைக்கப்படலாம்.
விம்கோ நகர் பணிமனை போன்று, மாதவரம், பூந்தமல்லியில் பணிமனை அமைக்கவும் திட்டம் உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.