தமிழக செய்திகள்

பிரதமர் மோடியின் பிறந்தநாள் பரிசாக 50 ஆயிரம் இளைஞர்களுக்கு ரெயில்வே தொழிற்பயிற்சி முகாம் தொடக்கம்

பிரதமர் மோடியின் பிறந்தநாள் பரிசாக நாடு முழுவதும் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு ரெயில்வே தொழிற்பயிற்சி முகாம்கள் தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பிரதமரின் திறமை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே கேரேஜ் மற்றும் வேகன் பணிமனை உள்பட நாடு முழுவதும் 75 இடங்களில், 10-ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கான இலவச தொழிற்பயிற்சி முகாம்கள் நேற்று தொடங்கப்பட்டன. இந்த ரெயில் சார் திறமை மேம்பாட்டு திட்டத்தை மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி மூலமாக டெல்லியில் இருந்து தொடங்கி வைத்தார்.

பெரம்பூர் பணிமனையில் இருந்து தலைமை பணிமனை மேலாளர் ரவீந்திரபாபு, என்ஜினீயர்கள் பரிமளகுமார், சிவராமன் மற்றும் தொழிற்பயிற்சி ஆசிரியர்கள் முத்துகிருஷ்ணன், கோவிந்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கானொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

தொழிற்பயிற்சி வகுப்புகள்

இதில் முதற்கட்டமாக, 10-ம் வகுப்பு வரை படித்து தொழிற்பயிற்சியில் ஆர்வம் உள்ள 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் நாடு முழுவதும் ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதன்படி, பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், எந்திரவியல் துறைக்கான தொழிற்பயிற்சி முகாம்கள் சென்னை பெரம்பூர், கோவை போத்தனூர் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.

போத்தனூரில் எந்திரங்களை கையாளுவது, எலக்ட்ரீசியன் உள்ளிட்ட வேலைகளுக்கான பயிற்சியும், பெரம்பூரில் வெல்டர், பிட்டர் ஆகியவற்றுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. பெரம்பூர் பயிற்சி முகாமில் 30 பேர் கலந்துகொண்டனர். பயிற்சி முகாமை தொடங்கி வைத்த பிறகு கணொலி காட்சி வாயிலாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:-

பிறந்தநாள் பரிசு

பிரதமர் மோடியின் பிறந்தநாள் பரிசாக நாடு முழுவதும் 50 ஆயிரம் பேருக்கு இலவச ரெயில்வே தொழிற்பயிற்சி இன்று (நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஏழை எளிய இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்த இலவச பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இளைஞர்கள் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும் இந்த பயிற்சியை கற்றுக்கொண்டு, தங்களது திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் தொழிற்பயிற்சியில் தங்களது திறனை வளர்த்து கொண்டு, சுயதொழிலில் ஈடுபடுவதுதான் இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும். என்றார். பின்னர் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட இளைஞர்களிடம் மத்திய மந்திரி கலந்துரையாடி, அவர்களை ஊக்கப்படுத்தினார்.

அதையடுத்து பெரம்பூர் தலைமை பணிமனை மேலாளர் நிருபர்களிடம் கூறும்போது, பெரம்பூரில் இந்த பயிற்சி முகாம் 18 நாட்களில் மொத்தம் 100 மணி நேரம் நடைபெற உள்ளது. நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் முகாம் நடக்க இருக்கிறது. நடப்பு ஆண்டில் 260 பேர் உள்பட 2024-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் 2,500 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக அக்டோபர் மாதம் 7-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கின்றன என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து