தமிழக செய்திகள்

மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதா? தனிக் குழுக்கள் மூலம் வீடு வீடாக ஆய்வு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதா? என தனி குழுக்கள் அமைத்து வீடு வீடாக ஆய்வு நடத்தப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் மழைநீர் சேகரிப்பு குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மழைநீர் சேகரிப்பு செய்முறை திட்ட விளக்க விழிப்புணர்வு கையேட்டினை அவர் வெளியிட்டார். பின்னர், சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து, நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் ஸ்ரீ பிரியனுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2 லட்சம் தொட்டிகள்

மழைநீர் சேகரிப்பு திட்டம் கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. ஏற்கனவே வீடு, வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு தொட்டிகளை புனரமைக்கவும், புதிதாக அதிக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் ஏற்படுத்தவும் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அதிகாரிகளை வைத்து தனிக் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு வார்டுக்கு ஒரு குழு விகிதம், 200 தனிக்குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வார்டுகளிலும் புதிதாக 1,000 மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்படும். அந்த வகையில் 2 லட்சம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் புதிதாக அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு பயிற்சி

இந்த திட்டத்தை செயல் படுத்த மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். இந்த கருத்தரங்கம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கும் இதேபோல் தனிக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த தனிக் குழுக்கள் மூலம் புதிதாக அமைக்கப்படும் மழைநீர் சேகரிப்பு தொட்டி மட்டுமல்ல, பழைய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பழுதடைந்திருந்தாலும் சரி செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படும்.

குறைந்த செலவு

இதற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தனிக் குழுக்களும் மழைநீர் சேகரிப்பு தொட்டி எவ்வாறு உள்ளது என வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். இந்த ஆய்வை முடிக்க கால நேரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க குறைந்த செலவு தான் ஆகும். கட்டிடம் கட்ட அனுமதி பெறும்போது, அந்த கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கவேண்டும் என்று நடைமுறை உள்ளது. சென்னையில் நிலத்தடி நீர் அதிகளவில் குறைந்துள்ளது. இதுவே தற்போது தண்ணீர் பற்றாக்குறை வருவதற்கு காரணம். இந்த திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தும்போது அதிக பயன் இருக்கும். தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு மக்களே இந்த திட்டத்தை கண்டிப்பாக செய்வார்கள். அதனால் அபராதம் ஒன்றும் விதிக்க தேவை ஏற்படாது.

சென்னைக்கு கூடுதல் தண்ணீர்

தமிழகம் முழுவதும் ஏரிகள் குளங்கள் அதிகளவில் தூர்வாரப்பட்டுள்ளது. பல்வேறு நீர்நிலைகள் உள்ள இடங்களில் விவசாயிகள் மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 210 ஏரிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்த ஏரிகளின் கொள்ளளவுகள் அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் சென்னைக்கு கூடுதலாக 1 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்தரங்கத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் த.ந.ஹரிஹரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் சி.என்.மகேஸ்வரன், பேரூராட்சிகளின் இயக்குனர் எஸ்.பழனிச்சாமி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய செயல் இயக்குனர் டாக்டர் த.பிரபுசங்கர், நகராட்சி நிர்வாக கமிஷனர் தா.கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் லலிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து