சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 2020-2021-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலைகளை அரசு அறிவித்திருக்கிறது. சாதாரண வகை நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.1,918 ஆகவும், சன்னரக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.1,958 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளின் கவலைகளைப் போக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை விவசாயிகளின் கவலைகளை அதிகரித்திருக்கிறது.
நெல்லுக்கு கட்டுப்படியாகும் விலையை மத்திய அரசு அறிவிக்கும் வரை, அதில் ஏற்படும் பற்றாக்குறையை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைப்படி ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,806 கொள்முதல் விலையாக வழங்கப்பட வேண்டியுள்ள நிலையில், அறுவடைக்கு பிந்தைய செலவுகளையும் சேர்த்து, குறைந்தது குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் கொள்முதல் விலை வழங்க வேண்டும். அது மட்டும்தான் விவசாயிகளின் கவலையைப் போக்கி மகிழ்ச்சியடையச் செய்யும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.