சென்னை,
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாச கடற்கரையில் சுனாமியால் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நடிகர் ரஜினிகாந்த் பல முறை அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பு அறிவிப்போடு நின்று விட்டது.
ஆனால் தற்போது வருகிற 31ந்தேதி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெளிவான முடிவை தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறேன். ரஜினியுடன் கூட்டணி வைக்கவேண்டுமா? இல்லையா? என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்.
தமிழகத்தில் இருந்து ஊழல் அப்புறப்படுத்தப்படவேண்டும். ஆர்.கே.நகர் தேர்தலிலும் ஊழல் பணம் கரைபுரண்டோடியது. தேர்தலில் விதிமுறை தான் இருக்கும். ஆனால், ஆர்.கே.நகர் தேர்தல் நிதி முறை ஆகிவிட்டது.
நேர்மையாக தேர்தல் நடக்கவில்லை. தேர்தல் ஆணையம் நியாயமாக நடக்கவில்லை. பேப்பரில் தான் டோக்கன் கொடுப்பது வழக்கம். ஆனால் ஆர்.கே.நகரில் ரூபாய் நோட்டையே டோக்கனாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு ஆர்.கே.நகரில் பணம் விளையாடி உள்ளது.
டோக்கனுக்கு பணம் கொடுக்காத தகராறில் இதுவரை 7 பேர் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகிறது. இதை தேர்தல் ஆணையம் கவனிக்கவேண்டும்.
தேர்தல் முடிந்ததோடு தங்களது கடமை முடிந்து விட்டது என்று நினைக்க கூடாது. இனியும் ஆர்.கே.நகர் தொகுதியை கண்காணிக்கவேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக நாங்கள் தான் முதலில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று சொன்னோம். ஆனால், மற்ற கட்சிகள் தேர்தலை நடத்தவேண்டும் என்று கூறினர். இதில் இருந்து அனைத்து கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது.
நோட்டாவை விட பா.ஜ.க. குறைவான வாக்குகள் பெற்றதாக விமர்சனம் செய்கிறார்கள். நோட்டாவில் பதிவான வாக்குகள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைகுனிவு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் தான் பா.ஜ.வு.க்கு பின்னடைவு என்று சொல்ல முடியும். இது பா.ஜ.க.வுக்கு பின்னடைவு இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் அது எதிரொலிக்கும்.
இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.