சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த 12-ந் தேதி அவர் அளித்த பேட்டி அமைந்தது. அவர் தனது பேட்டியில், தமிழகத்தில் அரசியல் புரட்சி ஏற்பட வேண்டும், தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும், கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்று கூறியதோடு, முதல்-அமைச்சர் ஆக மாட்டேன் என்றும் அதிரடியாக அறிவித்தார்.
மேலும் 3 அம்சங்களையும் அவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பத்திரிகைகளுக்கு நன்றி
இந்த நிலையில், தனது கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற ஊடகம், பத்திரிகைகள், சமூக வலைத்தளங்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த், தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்தது என்ன?
ரஜினியின் டுவிட்டர் பதிவை தொடர்ந்து, நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் ரஜினிகாந்திடம், பாமர மக்களிடம் நீங்கள் கூறிய கருத்துகள் போய் சேர்ந்துவிட்டதாக டுவிட்டர் பதிவிட்டு உள்ளர்கள். அடுத்தது என்ன? என்று மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், நானும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்தார்.