தமிழக செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ்? வி.சி.க. எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை - திருமாவளவன்

வி.சி.க.வின் நெருக்கடியால் தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறவில்லை என்ற கருத்து ஏற்புடையது அல்ல என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ‘தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. சேர்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள்தான் முட்டுக்கட்டையாக இருக்கிறதா?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த திருமாவளவன், “இது மிகவும் தவறான கருத்து. தி.மு.க. அப்படி ஒரு முடிவை எடுத்தால், நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம் என்று மட்டும்தான் சொன்னோம். தி.மு.க.வுக்கு வி.சி.க. எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.

ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வை சேர்த்துக்கொள்ளக் கூடாது என்ற எந்த இக்கட்டையும் தி.மு.க.வுக்கு நாங்கள் உருவாக்கவில்லை. தி.மு.க.வுக்கு பா.ம.க. தேவை என்றால், அவர்கள் துணிவாக அந்த முடிவை எடுப்பார்கள். அதில் யாருடைய கருத்தையும் கேட்க வாய்ப்பில்லை.

எனவே, வி.சி.க. நெருக்கடி கொடுத்ததால் தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறவில்லை என்ற கருத்து ஏற்புடையது அல்ல. 2011-க்கு பிறகு பா.ஜ.க. மற்றும் பா.ம.க. ஆகிய 2 கட்சிகளும் வெறுப்பு அரசியலை விதைப்பதால் அவர்களுடன் நாங்கள் சேரமாட்டோம் என்று அறிவித்தோம். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.