பொய்யான மருத்துவ சான்று வழங்கி அடிக்கடி விடுப்பு எடுத்த ராமநாதபுரம் மாவட்ட சிறை காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
சிறை காவலர்
ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட சிறையில் கடந்த 2011-ம் ஆண்டு காவலராக வேலைக்கு சேர்ந்தவர் மதார்சிக்கந்தர். இவர் அடிக்கடி பணிக்கு வராமல் மருத்துவ விடுப்பு எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ந் தேதியில் இருந்து தன்னிச்சையாக பணிக்கு வராமல் தொடர்ந்து 60 நாட்கள் மேல் மருத்துவ விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். பின்னர் ஏப்ரல் மாதம் மருத்துவ குழுவினர் முன்பு ஆஜராகி ஒரு வாரம் மட்டுமே வேலை பார்த்தவர் மீண்டும் தன்னிச்சையாக விடுப்பு எடுத்தார். மேலும் ஜூன்-30 ந்தேதி வரை மருத்துவ விடுப்பு கோரி விண்ணப்பங்களை அனுப்பியவர் அதன்பின்னர் மீண்டும் பணிக்கு வரவில்லை. இது குறித்து அதிகாரிகள் கேட்ட போது பல்வேறு விளக்கங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருந்ததற்கு அவரது உடல்நிலை எந்தவகையிலும் காரணமாக அமையவில்லை. மேலும் அவர் மருத்துவ சான்றுகளை ஒரு கருவியாக பயன்படுத்தி வெவ்வேறு காரணங்களை தெரிவித்து மருத்துவர்களிடமிருந்து பொய்யான மருத்துவ சான்றுகளை பெற்று நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளார்.
பொய்யான மருத்துவ சான்று
அவரது 10 ஆண்டு கால பணியில், தன்னிச்சையாக பணிக்கு வராமல் பலமுறை இருந்ததையும், அதற்காக பொய்யான மருத்துவ சான்றுகளை பெற்று அதனை காலதாமதமாக அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளார். மேலும் அவர் பணிக்காலத்தில் 10 ஊதிய உயர்வு நிறுத்த தண்டனைகள் பெற்றும் அவரது செயல்பாடுகளை திருத்தி கொள்ள முயற்சிக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவருகிறது. எனவே இவரது செயல்பாடுகள் அனைத்தும் அரசுப்பணிக்கு குறிப்பாக சீருடை பணிக்கு உகந்தது அல்ல. ஆதலால் அவர் சிறைத்துறை பணியில் நீடிப்பதற்கு முற்றிலும் தகுதியை இழந்து விட்டார். எனவே ராமநாதபுரம் மாவட்ட சிறைக்காவலர் மதார்சிக்கந்தரை பணி நீக்கம் செய்து மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வசந்தகண்ணன் உத்தரவிட்டார்.