சென்னை,
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், திரைப்பட தயாரிப்பாளருமான ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்தும், சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தனர்.
முன்னதாக தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு நேற்று வந்த ராம்குமார் மற்றும் அவரது மகனும், நடிகருமான துஷ்யந்தும் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசினர். பின்னர் ராம்குமார் நிருபர்களிடம் கூறுகையில், நான் பா.ஜ.க.வில் இணைய உள்ளேன். அதற்கு வலிமையான மனிதராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம். நான் பா.ஜ.க.வில் இணைந்து மக்களுக்கு நல்லது செய்வேன். என்று கூறியிருந்தார்.