தமிழக செய்திகள்

புதுவை கடற்கரை சாலையில் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார்

சுதந்திர தினத்தையொட்டி முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றுகிறார்.

இன்று (ஞாயிற்றுக் கிழமை) 75-வது சுதந்திரதினம் ஆகும்.

பிரமாண்ட ஏற்பாடுகள்

நாடு முழுவதும் சுதந்திர தினவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுவை அரசு சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் அரசு சார்பில் பந்தல் அமைக்கப்பட்டு பிரமாண்ட அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழா நடைபெறும் இடம் முழுவதும் மூவர்ணத்தை குறிக்கும் வகையில் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. சுதந்திரதின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை 9.04 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி காந்தி திடலுக்கு வருகிறார்.

அப்போது அவரை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆகியோர் வரவேற்று விழா மேடைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

அதைத்தொடர்ந்து 9.05 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். அப்போது போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசியகீதம் இசைக்கின்றனர்.

சுதந்திர தின உரை

அதன்பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுகிறார். தொடர்ந்து விழா மேடைக்கு திரும்பும் அவர் சுதந்திரதின உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

அதன்பின் காவல், காவல்படை அல்லாதோர், என்.சி.சி. சீனியர் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடக்கிறது. அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ரங்கசாமி மேடையில் நின்றபடி ஏற்றுக்கொள்கிறார். அத்துடன் அங்கு விழா நிறைவு பெறுகிறது.

அதன்பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றுகிறார்.

அணிவகுப்புகள் ரத்து

ஆண்டுதோறும் சுதந்திர தினவிழா உப்பளம் இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணிக்காக மைதானம் தோண்டப்பட்டுள்ளது.

இதனால் சுதந்திர தினவிழா கடற்கரை காந்தி திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தொற்று பரவல் காரணமாக சுதந்திரதின விழாவில் அணிவகுப்புகள், கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தையொட்டி சட்டசபை, கவர்னர் மாளிகை, பூங்காக்கள், தலைவர்களின் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இரவு நேரத்தில் இந்த இடங்கள் ஜொலிக்கின்றன. சுதந்திரதின விழாவையொட்டி போலீசார் இரவு பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

--