நாகர்கோவில்,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் குமரி மாவட்ட தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய குமரிக்கு நாளை (சனிக்கிழமை) வருகிறார்.
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.
இந்தநிலையில் தேர்தல் பிரசாரம் செய்ய குமரி மாவட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் வருவதால் வேட்பாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மு.க.ஸ்டாலின் முதன்முறையாக வருவதால் தி.மு.க. தொண்டர்களும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தயாராக உள்ளனர்.
அழகியமண்டபத்தில் திறந்த வேனில் நின்றபடி மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அங்கு குமரி மாவட்ட தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்குகள் சேகரிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடக்கிறது. குமரியில் ஒரு இடத்தில் பிரசாரம் செய்யும் அவர் அதை தொடர்ந்து நெல்லைக்கு புறப்பட்டு செல்கிறார்.