சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டன் இல்லத்தில் பணியாற்றியவர்களிடம் ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்து அங்கு பணியாற்றியவர்களின் பெயர் பட்டியலை அளிக்க ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது.
அதன்படி, அவர் நேரில் ஆஜராகி போயஸ்கார்டன் அலுவலகத்தில் பணியாற்றிய 31 பேரின் பெயர் பட்டியலை அளித்தார். பின்னர் அவர் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்க ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, ஜெயலலிதாவின் மற்றொரு உதவியாளரான கார்த்திகேயனுக்கு சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அவர் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இந்தநிலையில் போயஸ்கார்டனில் சமையல் வேலை பார்த்து வந்த மதுரையைச் சேர்ந்த ராஜம்மாள் (வயது 70) ஆணையம் சம்மன் அனுப்பியது. அவர் நேற்று தனது வக்கீல் முத்துக்குமாருடன் ஆணையத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி, ஜெயலலிதா வீட்டில் எத்தனை ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், 30 ஆண்டுகளாக வேலை பார்த்து வருவதாக தெரிவித்தார்.
இதன்பின்பு, உங்களை இந்த பணியில் சேர்த்தது யார்?, ஜெயலலிதாவுக்கு பிடித்தமான உணவு எது?, ஜெயலலிதா உங்களிடம் சகஜமாக பேசுவாரா?, ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு குறித்து தெரியுமா?, ஜெயலலிதா என்னென்ன நோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டார் என்பது பற்றி தெரியுமா? என்பது போன்று பல்வேறு கேள்விகளை கேட்டார். அனைத்து கேள்விகளுக்கும் ராஜம்மாள் நிதானமாக பதில் அளித்தார்.
2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்? என்று நீதிபதி கேட்டற்கு, ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது தனக்கு தெரியாது என்றும், தனது அறையில் தூங்கி விட்டதாகவும் ராஜம்மாள் கூறி உள்ளார்.
மேலும், மறுநாள் தகவல் தெரிந்து மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அதன்பின்பு பலமுறை மருத்துவமனைக்கு சென்ற போதும் அவரை பார்க்க இயலவில்லை என்றும் கூறி உள்ளார்.
மதியம் 2.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை சுமார் 2 மணி நேரம் அவர் வாக்குமூலம் அளித்தார்.
விசாரணை ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் இன்று ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக எனக்கு தெரிந்த விவரங்கள் மற்றும் மருத்துவமனையில் பார்த்ததை அப்படியே கூறினேன் என தெரிவித்தார்.
மார்ச் 2-வது வாரத்தில் தனக்கு மீண்டும் சம்மன் அனுப்புவதாக ஆணையம் கூறியுள்ளது என கூறினார்.