சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது சேலத்தில் இருக்கிறார். சுஜித் குறித்து தகவல் தெரியவந்ததும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பிவைத்து தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் தகுதிவாய்ந்த மீட்பு குழுக்களையும் உடனடியாக வரவழைத்து மீட்பு பணியை முடுக்கினார். குழந்தையை மீட்கும் பணியில் அனைத்து துறை அதிகாரிகளும் இந்த பணியில் சிரத்தையோடு ஈடுபட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இந்த பணியில் ஒருங்கிணைந்து செயல்பட தனது செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்தாலும் அவரது கவனம் ஆழ்துளை கிணற்றில் பரிதவிக்கும் குழந்தை சுஜித் மீதே இருக்கிறது. சுஜித் நிலைமை எப்படி இருக்கிறது? என்பது குறித்து கவலையில் இருக்கும் அவர், அடிக்கடி களத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தொடர்புகொண்டு நிலவரம் பற்றி விசாரிக்கிறார். முதல்-அமைச்சரின் கவலையை உணர்ந்த அதிகாரிகளும் கள நிலவரங்களை உடனுக்குடன் தெரிவித்து வருகின்றனர்.