சென்னை
குட்கா ஊழல் தொடர்பாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை உள்பட பல்வேறு இடங்களில் 5-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், குட்கா ஆலை உரிமையாளர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.
அப்போது சிக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.குட்கா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ இதுவரை 6 பேரை கைது செய்து உள்ளது.
இந்த நிலையில் குட்கா விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் செந்தில்வளவன், ஓய்வுபெற்ற கலால் நுண்ணறிவுப்பிரிவு கூடுதல் ஆணையர் ஸ்ரீதர் ஆகியோரின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.