தமிழக செய்திகள்

காற்றாலை மின்சார ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தயாரா? ஆதாரத்தை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் கேள்வி

காற்றாலை மின்சார ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தயாரா? என்று ஆதாரத்தை வெளியிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்ற பொய்யை மின்துறை அமைச்சர் தங்கமணி மனசாட்சியை அடகுவைத்துவிட்டு கூறியிருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள திருநெல்வேலி மண்டல தணிக்கை பிரிவின், உதவி தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில், உற்பத்தியே ஆகாத காற்றாலையில் 9 கோடியே 17 லட்சத்து 3 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் பெறப்பட்டதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ரூ.9 கோடியை மின்வாரியம் கொடுக்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் 22 சதவீத வட்டியுடன் உடனடியாக வசூல் செய்ய வேண்டும் என்று மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் உள்ள வரிகளை ஆதாரத்துடன் சொல்வது என்றால், மின் உற்பத்தி இல்லாமல் போலியாக மின்சாரம் ஒதுக்கீடு செய்ததாக நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் அந்த தணிக்கை அதிகாரி அறிக்கை கொடுத்த பிறகும், ஊழல் நடக்கவில்லை என்று மின்துறை அமைச்சர் மறைக்க வீணாக முயற்சி செய்வதில்தான், ஊழலின் மொத்த உருவமுமே மறைந்திருக்கிறது. மின்வாரியத்திற்கு ஏதும் பிரச்சினையில்லை என்றால், ரூ.9 கோடியை வசூல் செய்யுங்கள் என்று தணிக்கை அதிகாரி கூறியிருப்பது ஏன்?

அமைச்சர் தன் பேட்டியில் இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம் என்று மூடி மறைக்கிறார். அப்படியென்றால், மின்பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி வட்டார மேற்பார்வை பொறியாளர் கடிதம் எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அதுவும் உற்பத்தி ஆகாத காற்றாலையில் மின்சாரம் பெறப்பட்டதாக ஏன் கடிதம் எழுதப்பட்டது?

அந்த மேற்பார்வை பொறியாளர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? அதேபோல், தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரத்திற்கு அமைச்சர் தன் பேட்டியில் கூறியிருப்பது போல், ரூ.11 கோடி செலுத்தக்கோரி மின் பகிர்மானக்கழகம் இப்போது டிமான்ட் நோட்டீஸ் அனுப்பியது ஏன்?

ஆகவே, காற்றாலை மின்சாரத்தில் போலி ஒதுக்கீடு கணக்கு காட்டி ஊழல் நடந்திருப்பது ஆதாரபூர்வமானது. இதோ ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறேன். ஊழல் நடக்கவில்லை என்று இப்போதும் அமைச்சர் கூறுவாரேயானால், மின்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காற்றாலை மின்சாரத்தில் நடைபெற்றுள்ள இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட தயாரா? இவ்வாறு மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது