சென்னை,
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டாரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவுடையது. மொத்த நீர்மட்ட உயரம் 24 அடி. இதன் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி. தற்போது ஏரிக்கு வரும் நீர் மட்டம் 22 அடியை தாண்டி உள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்தநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள நீர் போக்கி வழியாக 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே ஏரியிலிருந்து மிகைநீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றங்கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருவமழைக்கு முன்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.