தமிழக செய்திகள்

ரூ.1,000 நிவாரண தொகையை ரேஷன் கடையில் வைத்து வழங்கினால் ஒழுங்கு நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

தமிழக அரசு அறிவித்து உள்ள ரூ.1,000 நிவாரண நிதியை ரேஷன் கடைகளில் வழங்கினால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 19-ந் தேதி முதல் 30-ந் தேதிவரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களை சேர்ந்த அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிவாரணத் தொகை கடந்த 22-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வீடு, வீடாக சென்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பெரும்பாலான இடங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று நிவாரண தொகையை வழங்கவில்லை. ரேஷன் கடைகளுக்கு மக்களை வரவழைத்தும், தெருவில் பொதுவான ஒரு இடத்துக்கு வரவழைத்தும் பணத்தை வழங்கினார்கள். இதனால் சமூக இடைவெளி மட்டுமின்றி தமிழக அரசின் உத்தரவும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டும், புகார்களும் எழுந்தது. இதையடுத்து ரேசன் கடை அதிகாரிகள், ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை

இதுதொடர்பாக கூட்டுறவுத்துறையின் கூடுதல் பதிவாளர் ம.அந்தோணிசாமி ஜான்பீட்டர், மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரூ.1,000 நிவாரண நிதியை ரேசன் கடைகளில் வைத்து வினியோகம் செய்யக்கூடாது. ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வினியோகம் செய்வதை கண்காணிக்க வேண்டும். சில இடங்களில் ரேஷன் கடைகள் மூடப்படாமல் ரேஷன் அட்டைதாரர்களை கடைக்கு வரவழைத்து ரூ.1,000 வினியோகத்தை மேற்கொள்வதாக புகார்கள் வந்துள்ளன.

ஆனால் அரசின் அறிவிப்பின்படி, நிவாரண நிதியை ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று மட்டுமே வினியோகம் செய்யப்படவேண்டும். இதைக் கண்காணிக்கத் தவறுகிற, சார்நிலைக் கண்காணிப்பு அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளைத் திறந்து வினியோகம் செய்யும் கடைப் பணியாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை