தமிழக செய்திகள்

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை தி.மு.க. எதிர்க்கும் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தேசிய மருத்துவ ஆணைய மசோதா விவாதத்திற்கு வரும்போது அதை எதிர்த்து தி.மு.க. ஆணித்தரமான கருத்துகளை முன்வைக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MK Stalin

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவக் கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில், மாநில உரிமைகளை மீண்டும் பறித்து அத்துமீறல் நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் எனும் ஒன்றை அமைக்கும் முயற்சியில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஈடுபட்டிருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

கூடுதல் செயலாளர் தலைமையிலான குழு, மருத்துவக் கல்லூரியில் உள்ள 60 சதவீத இடங்களுக்கு தனியார் கல்லூரிகளே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்து, தனியார் மயத்திற்கு நடைபாவாடை விரித்திருப்பது வேதனையளிக்கிறது. குறிப்பாக, கல்விக் கட்டணத்தில் அரசு தலையிட்டால் தனியார் கல்லூரிகள் வராது என்று அந்த குழு குறிப்பிட்டிருப்பது, மருத்துவக் கல்வியை தனியாருக்குத் தாராளமாகத் தாரை வார்ப்பதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது என்ற ஓரவஞ்சனையை உறுதி செய்கிறது.

வலியுறுத்தி பேசாதது ஏன்?

இதுதவிர, புதிதாக அமைக்கப்படும் தேசிய மருத்துவ ஆணையத்தில் மாநில அரசுகளுக்கு, குறிப்பாக அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் மாநில அரசின் பங்கை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதாக அமைந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, அறிக்கை கொடுத்துள்ள பாராளுமன்ற நிலைக்குழுவின் முன்பு தமிழக அரசின் சார்பில் ஆஜராகி கருத்துச் சொன்னவர்கள், மாநிலப் பட்டியலில் உள்ள சுகாதாரத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் மருத்துவக் கல்வி தொடர்பான உரிமை, மாநிலத்தின் பிரத்யேக உரிமை குறித்து ஏன் வலியுறுத்திப் பேசவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர் நியமனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே நடப்பதும், மத்திய அரசின் கட்டளைகளை மாநில அரசுகள் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்று மருத்துவ ஆணைய மசோதாவில் இடம்பெற்றுள்ள வாசகங்களும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கத்தை அவமதித்துள்ளது.

அடையாள வேலை நிறுத்தம்

ஏற்கனவே நீட் தேர்வு மூலம் சமூகநீதியின் குரல் வளையில் காலை வைத்து நெரித்து அழுத்திக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது தேசிய அளவிலான பொதுத்தேர்வு எழுதிவிட்டுத்தான் டாக்டர் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனையை உருவாக்குவது புதிய லைசென்ஸ் ராஜ் புகுத்தப்படும் ஆபத்தை உருவாக்கியிருக்கிறது. இதனால் கொந்தளித்துப் போயிருக்கும் டாக்டர்கள் நாடு முழுவதும் அடையாள வேலை நிறுத்தத்தில் இன்று (நேற்று) ஈடுபட்டிருப்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தெளிவாக உணர வேண்டும்.

இதன் மூலமாக, மருத்துவ மேல்படிப்பிற்கும் ஒரு நீட் தேர்வு இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. பிளஸ்-2 தேர்வுக்குப் பிறகு நீட் தேர்வு மற்றும் எம்.பி.பி.எஸ். பாடத்திட்டத்தை முடித்த பிறகு, மீண்டும் ஒரு தேசிய அளவிலான பொதுத்தேர்வு என்றெல்லாம் உருவாக்கி, அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவுக்கு தடுப்பணை கட்டித் தகர்ப்பதை, சமூகநீதி மீதான சம்மட்டி அடி என்றே தி.மு.க. கருதுகிறது. சமவாய்ப்பு, சமூகநீதி என்ற அரசியல் சட்டத்தின் நோக்கத்தை எல்லாம் அர்த்தமற்றதாக்கி, மருத்துவக் கல்விக்கும், டாக்டர்களுக்கும், ஏழை - எளிய, மக்களுக்கும் முற்றிலும் விரோதமாக இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

திரும்பப்பெற வேண்டும்

ஆகவே, ஏழை - எளிய, கிராமப்புற மற்றும் நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு, போராடும் டாக்டர்களின் உணர்வு, குக்கிராமத்திலும் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய மாநில அரசின் உரிமை போன்றவற்றிற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கே பிரதிநிதித்துவம் இல்லாத தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மசோதா மாநிலங்களவையில் (மேல்-சபை) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் போது, தி.மு.க. சார்பில், இத்தகைய ஆணித்தரமான கருத்துகள் எடுத்து வைக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்