தமிழக செய்திகள்

பெண்ணாடம் அருகே, மேம்பாலத்தின் கீழ் பகுதியில்கனரக வாகனங்கள் சென்று வரும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்புஅதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

பெண்ணாடம் அருகே, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கனரக வாகனங்கள் சென்று வரும் திட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்ணாடம், 

பெண்ணாடம் அருகே பெ.பொன்னேரி கிராமத்தில் திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் ரெயில்வே கேட் இருந்தது. இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன.

ஆனால் ரெயில்வே கேட் போடும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள், தங்களுக்கு ரெயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற அ.தி.மு.க. அரசு அங்கு மேம்பாலம் அமைத்து கொடுத்தது. தற்போது எவ்வித சிரமம் இன்றி போக்குவரத்து நடந்து வருகிறது.

புதிய திட்டம்

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிமெண்டு தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவில் வரும் கனரக வாகனங்கள் மேம்பாலத்தின் கீழே நுழைந்து பொன்னேரி கிராமத்தின் நுழைவு வாயில் வழியாக வெளியே வருவது போன்று சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறையினர் தயார் செய்து உள்ளனர்.

நேற்று இந்த திட்டம் தொடர்பான ஆயத்த பணிகளை பார்வையி டுவதற்காக நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் ராமலிங்கம் தலைமையிலான நெடுஞ்சாலைத்துறையினர் வந்தனர். பின்னர் அவர்கள் திட்டத்தில் உள்ள பகுதியை பார்வையிட்டனர்.

வாக்குவாதம்

இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது, நாங்கள் கிராமத்தில் இருந்து வெளியே வரும் போது லாரிகள், கனரக வாகனங்கள் மோதி உயிர்ச்சேதங்கள் ஏற்படும். ஆகவே இங்கு சாலை அமைக்கக் கூடாது என்றனர். தகவல் அறிந்ததும் பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அப்பகுதி மக்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துக்கொள்வதாக கூறி கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.