தமிழக செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்: அதிமுக, பா.ஜ.க. வெளிநடப்பு!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டசபையில் மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தனி தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இதுதொடர்பான அந்த தீர்மானத்தில், அகதிகளாக வருவோரை மதரீதியாக பிரித்து பார்க்கும் வகையில் சிஏஏ சட்டம் இருக்கிறது. மத்திய அரசு 2019- ஆம் ஆண்டு கொண்டு வந்த இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கும், மத நல்லிணக்கத்துக்கு உகந்ததாக இல்லை. இந்திய நாட்டின் ஒற்றுமையை போற்றும் வகையில் இந்திய குடியுரிமைத் திருத்த சட்டத்தை ரத்து செய்ய தமிழக சட்டசபை வலியுறுத்துகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து சட்டசபையில் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க. வெளிநடப்பு

இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தின்போது, கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் முடக்கப்பட்டிருப்பதாக புகார் கூறியதுடன், அதுகுறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டசபை எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு புறக்கணிக்கிறது. அதிமுக அரசுக் கொண்டு வந்த எந்த திட்டத்தையும் அதிமுக அரசு அனுமதிக்கவில்லை. இது தொடர்பான எங்களது கோரிக்கைகளையும் திமுக அரசு பரிசீலிக்கவில்லை. தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அத்திட்டத்தை திமுக அரசு சீரழித்துள்ளது. இவை எல்லாவற்றையும் வலியுறுத்திதான் சட்டசபையில் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டோம். ஆனால் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு பாதியிலேயே பறிக்கப்பட்டது. நாங்கள் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. இதனைக் கண்டித்து தற்போது வெளி நடப்பு செய்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க. வெளிநடப்பு

இந்திய குடியுரிமைத் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்ட சபையில் தமிழக அரசு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் நால்வரும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நாயினார் நாகேந்திரன், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்காத முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத நல்லிணக்கத்தை பற்றி பேசுவது வருந்தத்தக்கது. மோடி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் பாதுகாப்பாக இருப்பதற்கு மத்திய அரசு பாடுப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளி நடப்பு செய்கிறோம். அரசியலைப்பு சட்டப்படி மத்திய அரசுக்கு மக்கள் பாதுகாப்புக்காக சட்டம் கொண்டு வருவதற்கு இடம் இருக்கிறது. இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு