தமிழக செய்திகள்

அன்புமணி தரப்பு பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

அன்புமணி தரப்பு பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை,

அன்புமணி தரப்பு பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம், சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு;

தீர்மானங்கள்

01 : 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. அங்கம் வகிக்கும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு கடுமையாக உழைக்க உறுதியேற்போம்!

இந்திய விடுதலைக்குப் பிந்தைய 78 ஆண்டுகளில் தமிழ்நாடு மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ளது. நல்லாட்சி தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்தும், தமிழ்நாட்டு மக்களுக்கு ஆசை காட்டியும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் துரோகம், ஏமாற்றம் ஆகியவற்றை மட்டுமே பரிசாகத் தந்திருக்கிறது. அமைதிக்கும், மகிழ்ச்சிக்கு இலக்கணம் ஆக திகழ்ந்த தமிழ்நாட்டில் இப்போது மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் சாம்ராஜ்யம் தான் நடந்து கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவை பெருகிவிட்டன. தமிழ்நாட்டை வாழத்தகுதியற்ற மாநிலமாக மாற்றியது 5 ஆண்டு திமுக ஆட்சியின் சாதனையாகும்.

வரிகள் உயர்வு, கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என தமிழ்நாட்டு மக்களை திமுக அரசு கசக்கிப் பிழிகிறது. 2021-ஆம் ஆண்டு தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சியோ, பொருளாதார வளர்ச்சியோ ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை நடத்துவதே பெரும் நரகமாக மாறி விட்டது. இப்படி ஒரு நிலையை தமிழகத்தில் ஏற்படுத்திய திமுக அரசுக்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது.

திமுக ஆட்சி இனியும் தொடர்ந்தால் தமிழகத்தையும், தமிழக மக்களையும் எவராலும் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றுவது தான் தமிழ்நாட்டு மக்களின் முன் உள்ள மிகப்பெரிய கடமை ஆகும். இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததற்காகவும், மதுராந்தகத்தில் கடந்த ஜனவரி 23&ஆம் தேதி நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்டமான பரப்புரைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி ஏன் அகற்றப்பட வேண்டும்? என்பது குறித்து விளக்கிப் பேசி கூட்டணியின் பரப்புரைக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியதற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு பாட்டாளி இளைஞர் சங்கம் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக 2026&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. அங்கம் வகிக்கும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைக்க பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் உறுதியேற்றுக் கொள்கிறது.

02 : தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் மூலம் திமுக அரசுக்கு எதிராக புதிய எழுச்சியை ஏற்படுத்திய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு பாராட்டுகள்!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 108 நாள்களுக்கு தமிழகம் முழுவதும் மேற்கொண்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை.

2025&ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25&ஆம் தேதி திருப்போரூரில் தொடங்கி நவம்பர் 9&ஆம் தேதி தருமபுரியில் தமது உரிமை மீட்புப் பயணத்தை நிறைவு செய்த திமுக அரசின் தோல்விகள், ஒவ்வொரு துறையிலும் திமுக அரசு ஏற்படுத்திய சீரழிவுகள், கனிமவளக் கொள்ளைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருகளால் ஏற்பட்ட பாதிப்புகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஆகியவை குறித்து விரிவாக பரப்புரை செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன் பயனாகத் தான் தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் ஏற்பட்டது. தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் மூலம் திமுக அரசை அகற்ற அடித்தளம் அமைத்த பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.

03 : திமுக ஆட்சியின் மீதான ரூ. 6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆணையம் அமைத்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்!

தமிழ்நாட்டில் விடுதலைக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் பொறுப்பேற்கத் தொடங்கிய பிறகு பதவிக்கு வந்த அரசுகளில் மிக அதிக ஊழல் செய்த அரசு என்ற அவப்பெயரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தான் பெற்றிருக்கிறது. திமுக அரசின் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் கூட, அவற்றில் கீழ்க்கண்ட 10 ஊழல் குற்றச்சாட்டுகளை முதன்மையானதாகவும், திடமான ஆதாரங்கள் உள்ளவையாகவும் பாட்டாளி இளைஞர் சங்கம் கருதுகிறது. அவற்றின் விவரங்கள் வருமாறு:

1. நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.888 கோடி பணி நியமன ஊழல்

2. ரூ. 4,730 கோடி மணல் கொள்ளை. கடந்த நான்கரை ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையின் மொத்த மதிப்பு ரூ.1.80 லட்சம் கோடி

3. நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி ஒப்பந்த ஊழல்

4. ரூ.366 கோடி நகராட்சி நிர்வாகத்துறை பணியிட மாற்ற ஊழல்

5. ரூ.1,240 கோடி நெல் கொள்முதல் ஊழல் மற்றும் ரூ. 165 கோடி நெல் சரக்குந்து ஒப்பந்த ஊழல்

6. ரூ. 2,000 கோடி கனிமவளக் கொள்ளை ஊழல்

7. பள்ளிக்கரணை சதுப்பு நில அடுக்குமாடி கட்டிட அனுமதி ஊழல்

8. மது வரி ஏய்ப்பு & ரூ.1.82 லட்சம் கோடி ஊழல்

9. ஆண்டுக்கு ரூ.5,400 வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.27,000 கோடிக்கு பாட்டிலுக்கு ரூ.10 ஊழல்

10. ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.75,000 கோடி மின் கொள்முதல் ஊழல்

மேற்கண்ட அனைத்து ஊழல்களுக்குமான ஆதாரங்கள் பொதுவெளியிலேயே உள்ளன. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் கொள்ளத் தேவையில்லை. ஆனால், ஊழல் விசாரணைக்கு அடுத்தடுத்து முட்டுக்கட்டைகளை போடுவதன் மூலம் திமுக ஆட்சியாளர்கள் ஊழல் செய்திருக்கிறார்கள் என்பதும், அது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள அஞ்சுவதும் உறுதியாகிறது. மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்தவர்களும், ஊழல் செய்தவர்களும் தண்டனையின்றி தப்பக் கூடாது. எனவே, ரூ. 6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் மூலம் விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

04 : மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் அமைக்க திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழ்நாட்டு மக்கள் முன்வர வேண்டும்!

தமிழ்நாட்டின் இரு பெரும் அடையாளங்களாக மது போதையும், கஞ்சா உள்ளிட்ட பொருள்களின் போதையும் உருவெடுத்துள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களும் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினை மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனையும், அதனால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளும் தான். அரசு நினைத்தால் 24 மணி நேரத்தில் கஞ்சா வணிகத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்வதே திமுகவினர் தான் என்பதால் கஞ்சா வணிகத்தை கட்டுப்படுத்த திமுக அரசு முன்வரவில்லை.

தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரை பாதுகாக்க வேண்டும் என்றால், மது மற்றும் கஞ்சா வணிகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திமுக ஆட்சியில் தொடரும் வரை அதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் வீழ்த்த தமிழ்நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்று இக்கூட்டம் வேண்டுகிறது.

05 : தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தவறியதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்!

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், வன்னியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை வழங்க முடியவில்லை; பட்டியலினத்தவருக்கான உள் இடஒதுக்கீடு இன்னும் கனவாகவே நீடிக்கிறது. இத்தனை சமூக அநீதிகளுக்கும் காரணமான திமுக அரசு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தத் தவறியதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

06 : படித்த இளைஞர்களின் அரசு வேலை, தனியார் வேலை குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம்!

திமுக ஆட்சிக்கு வந்தால், பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்; தனியார் துறையில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்று 2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு காலியிடங்களை நிரப்பவோ, புதிய பணியிடங்களை ஏற்படுத்தவோ திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 7 லட்சமாக உயர்ந்துவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 50,000 பேருக்கு மட்டும் தான் நிலையான பணி வழங்கப்பட்டிருக்கிறது. அரசுத் துறைகளில் இன்னும் ஆறரை லட்சம் பணியிடங்கள் நிரப்படாமல் காலியாகத் தான் கிடக்கின்றன.

இப்படியாக படித்த இளைஞர்களுக்கு ஐந்தரை லட்சம் அரசு வேலை, தனியார் துறைகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள், தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு துரோகம் செய்த திமுக அரசுக்கு பாட்டாளி இளைஞர் சங்கப் பொதுக்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.