தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதில்: யார் ஆட்சியில் குதிரை பேரம் நடந்தது என்பது தீர்ப்பு வந்ததும் மக்களுக்கு தெரிய வரும்

யார் ஆட்சியில் குதிரை பேரம் நடந்தது என்பது தீர்ப்பு வந்ததும் நாட்டு மக்களுக்கு தெரியவரும் என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து திருச்சி விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. விழாவுக்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தவிழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்தும், ரூ.212 கோடி மதிப்பிலான 13 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.457 கோடியே 31 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான 45 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும், 32 ஆயிரத்து 661 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியிலே என்ன திட்டம் மக்களுக்கு கிடைத்திருக்கின்றது, என்ன நன்மை கிடைத்திருக்கின்றது என்று அடிக்கடி புலம்பிக் கொண்டிருக்கிறார். நம்முடைய கட்சி பற்றியும், ஆட்சி பற்றியும் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். அதேபோல, மாற்றுக்கட்சியை சேர்ந்த தலைவர்களும் விமர்சனம் செய்கிறார்கள்.

மாற்றுக் கட்சியினர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஆதாரம் இல்லாத குறைகளை கூறிக்கொண்டிருக்கிறார்கள். குறை கூறுபவர்கள் குறை கூறிக்கொண்டு தான் இருப்பார்கள். குறைகளுக்கு அவர்களால் தீர்வு சொல்ல தெரியாது.

எதிர்க்கட்சி தலைவர் நம் ஆட்சியைப்பற்றி விமர்சனம் செய்துகொண்டே இருக்கிறார். எப்போது பார்த்தாலும், நம்முடைய ஆட்சியை குறைசொல்வது தான் அவரது வழக்கம். அவர் எப்போது பார்த்தாலும் ஒரே வசனத்தை பேசுவார், அதாவது இது குதிரை பேர அரசு என்று சொல்வார். யாரை சொல்கிறார் என்று நமக்கு தெரியவில்லை.

ஏனென்றால், விரைவிலே தீர்ப்பு வருவது உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். அப்போது யாருடைய ஆட்சியில் குதிரை பேரம் நடந்தது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:-

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கியவர்கள் தற்போது மக்கள் மன்றத்தில் மூக்கு உடைபட்டு, செய்த பாவம் தீராமல் வாழ்ந்து வருகிறார்கள்.

2016-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்து, 35 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சி செய்கிற உரிமையை ஜெயலலிதா பெற்று தந்தார். எங்களை தேர்தலில் நிறுத்தி எங்களுக்காக மக்களிடம் ஜெயலலிதா வாக்கு கேட்டார். அதனால் தான் நாங்கள் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறோம். இதேபோல் நாங்களும் தொகுதிக்கு சென்று வாக்கு கேட்டபோது, ஏற்கனவே செய்த திட்டங்களை கூறி கேட்கவில்லை. ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று தான் வாக்கு கேட்டோம்.

ஆனால் தற்போது ஜெயலலிதா இல்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடத்தி வருகிறார். ஜெயலலிதா, எனக்கு பிறகும் இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் இருக்கும் என்றார். அவர் சொன்னதை போல இந்த இயக்கம் இன்னும் பல ஆண்டுகள் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்