தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி தனி தாசில்தார் மனோஜ்முனியனை எந்த விசாரணையும் இன்றி பணி இடைநீக்கம் செய்ததை கண்டித்தும், அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் இந்த தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் வடிவேல் தலைமை தாங்கினார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். காலை 11 மணியளவில் தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது. அதுபோல், பெரியகுளம், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தேனி, ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகா அலுவலகங்கள் முன்பும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வருவாய்த்துறை அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.