தமிழக செய்திகள்

நடுத்தர மக்களுக்கு சுமையாக மாறிய சமையல் கியாஸ் விலை உயர்வு

நடுத்தர மக்களுக்கு சுமையாக மாறிய சமையல் கியாஸ் விலை உயர்வு, குடும்ப தலைவிகளை குமுற வைத்துள்ளது.

மனித நாகரிகம் நாளுக்குநாள் மாறி கொண்டே இருக்கிறது. இதில் உணவு முறை மட்டுமின்றி உணவு சமைக்கும் முறையும் மாறிவிட்டது. விறகு அடுப்பில் புகைக்கு நடுவே பெண்கள் சிரமத்துடன் சமைத்த காலம் காலாவதியாகி பல ஆண்டுகள் ஆகிறது.

சமையல் கியாஸ்

அடுப்பில் வைத்த விறகில் எரிய மறுக்கும் தீயை, எரிய வைப்பதற்கு மூச்சை பிடித்து ஊதி, சுவாச பிரச்சினையை சந்தித்த பெண்கள் ஏராளம். அதனால் சமையல் அறையை போர்க்களமாக நினைத்து பயந்த இளம் பெண்கள் பலருண்டு. விறகு அடுப்பில் வெந்நீர் வைப்பதற்கு கூட தயங்கி, தாய் அல்லது பாட்டியை தாஜா செய்த பெண்களும் உண்டு.

இந்த நிலையில் தான் சமையல் கியாஸ் பயன்பாட்டுக்கு வந்தது. சமையல் அறையில் பெண்கள் சந்தித்த சிரமத்தை சமையல் கியாஸ் போக்கியது. எனவே சமையல் கியாசை பெண்கள் பெரும் வரமாகவே பார்க்கின்றனர். புகையில்லாத சமையல் அறை எனும் மாற்றத்தை கியாஸ் பயன்பாடு கொண்டு வந்தது.

கிராமங்களையும் ஆக்கிரமித்தது

தொடக்கத்தில் நகரவாசிகள் மட்டுமே பயன்படுத்திய சமையல் கியாஸ், காலப்போக்கில் கிராமங்களையும் ஆக்கிரமித்து கொண்டது. மக்களின் சிரமத்தை போக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் சமையல் கியாஸ் இணைப்பை இலவசமாக வழங்கியது முக்கிய காரணமாக அமைந்தது.

இதன் விளைவு, கிராமப்புறங்களில் கூட கியாஸ் இல்லாமல் சமையல் இல்லை என்ற நிலையாகி விட்டது. மணிக்கணக்கில் சமையல் செய்த காலம் போய், ஒருசில நிமிடங்களில் சமையல் சாத்தியமானது. இதனால் பொங்கல் பண்டிகை தினத்தில் பொங்கல் வைப்பதற்கு மட்டுமே விறகு அடுப்பு பயன்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

விலை உயர்வு

கிராமம் முதல் நகரங்கள் வரை அனைத்து வீடுகளிலும் எல்லாம், சமையல் கியாஸ் என்றாகி விட்டதால் தேவை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதேபோல் சமையல் கியாசின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. சர்வதேச சந்தைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் விலையை நிர்ணயிக்கின்றன.

அதன்மூலம் கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயை கடந்து சில மாதங்களாகி விட்டது. அந்த விலை குறையுமா? என்று குடும்ப தலைவிகள் எதிர்பார்த்து இருந்த நிலையில் மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல் உள்ளது.

ரூ.1,200 வசூல்

திண்டுக்கல்லில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,145 ஆகிவிட்டது. அதோடு சேர்த்து சிலிண்டர் வினியோகிக்க ரூ.35 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்படுகிறது. கிராமங்களில் ஒரு சிலிண்டருக்கு ரூ.1,200 வரை வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த குடும்ப தலைவிகளிடம் கேட்ட பேது அவர்கள் கூறியதாவது:-

ஜூலியட் (கொசவப்பட்டி) :- வீட்டு பயன்பாட்டின் முக்கிய தேவையான மின்சாரத்தின் கட்டணம் ஏற்கனவே உயர்ந்து விட்டது. அதில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக கியாஸ் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. சாதாரண, நடுத்தர மக்களும் கியாசை பயன்படுத்துவதால் மத்திய அரசு விலையை குறைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கூடுதல் மானியத்தை ஒதுக்கி கியாஸ் விலையை குறைக்க வேண்டும்.

விறகு அடுப்பு

காளீஸ்வரி (ஆயக்குடி) :- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் சாமானிய மக்கள் விறகு கொண்டு சமைத்தனர். அரசு திட்டங்களால் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தும் பழக்கத்துக்கு மக்கள் மாறிவிட்டனர். அனைத்து தரப்பினரும் கியாஸ் பயன்படுத்த தொடங்கியதும் கியாஸ் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் தினக்கூலி வேலை பார்க்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களை பாதிக்கும் வகையில் உள்ள விலை உயர்வை குறைக்க வேண்டும்.

கோகிலா (வேடசந்தூர் யூசுப்நகர்) :- நான் சிறுமியாக இருந்த போது அனைத்து வீடுகளிலும் விறகு அடுப்பு தான் இருந்தது. அதன் பிறகு மண்எண்ணெய் அடுப்புக்கு மக்கள் மாறினர். மத்திய மாநில அரசுகள் இலவசமாக கியாஸ் இணைப்பை வழங்கியதால் குடும்ப தலைவிகள் அனைவரும் தற்போது கியாஸ் சமையலுக்கு அடிமையாகி விட்டனர். எனவே பெண்கள், மீண்டும் விறகு அடுப்பில் சமைக்க முடியாத நிலைமைக்கு ஆளாகி விட்டோம். கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதனால் அப்போது கியாஸ் விலையை உயர்த்தாமல் தற்போது திடீரென விலையை உயர்த்தி உள்ளனர். கியாஸ் விலை உயர்வு சாதாரண, நடுத்தர குடும்பங்களுக்கு சுமையாக மாறி இருக்கிறது.

அரிசியை விட விலை அதிகம்

லீமா ரோஷி (திண்டுக்கல்) :- ஒருசில வடமாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்ததும் சமையல் கியாஸ் விலையை உயர்த்தி இருப்பது வேதனை அளிக்கிறது. சாதாரண மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் சமையல் கியாசை தான் பயன்படுத்துகின்றனர். ஒரு கியாஸ் சிலிண்டர் வீட்டுக்கு வருவதற்கு ரூ.1,200 வரை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொகைக்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசியை வாங்கி விடலாம். ஒரு மாதத்துக்கு தேவையான அரிசியை விட, சமையலுக்கு பயன்படுத்தும் கியாஸ் விலை அதிகமாக இருக்கிறது. இது சாதாரண மக்களின் குடும்ப செலவை அதிகரித்து இருக்கிறது. எனவே வீட்டு உபயோக கியாஸ் விலையை குறைக்க வேண்டும்.

சுபாங்கி ஆனந்த் (நத்தம்) :- அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சாதாரண மக்கள் குடும்பம் நடத்துவதே சிரமமாக உள்ளது. இதற்கிடையே வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு குடும்பத்தின் பட்ஜெட்டிலும் கியாசுக்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கியாஸ் விலை உயர்வை கணக்கிட்டால் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறிவிடலாமா? என்று தேன்றுகிறது. ஆனால் கியாஸ் பயன்படுத்தி பழகி விட்டதால் மாறுவது மிகவும் கடினம். எனவே சாதாரண மக்களை பாதிக்கும் கியாஸ் விலையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...