சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் பெற்ற வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த டிசம்பர் 21-ந் தேதி நடந்தது. இதில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 89 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்தவரும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டவருமான எம்.எல்.ரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், டி.டி.வி.தினகரன் இடைத்தேர்தலில் முறைகேடுகள் செய்து அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்று உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பெறும் அளவில் பணம், பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பண வினியோகம் மற்றும் முறைகேடு தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது புகார் எழுந்தன. ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் டி.டி.வி.தினகரன் மீண்டும் போட்டியிட அனுமதிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தினகரன் வெற்றிக்கு எதிராக சுயேட்சை வேட்பாளர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.