ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க. வில் ஏற்பட்ட பிளவால் அக்கட்சிக்குள் மோதல் வெடித்தது.
சசிகலா தலைமையில் இயங்கி வந்த அணி, அவர் சிறை சென்ற பின்னர் எடப்பாடி அணியாக மாறியது. இதன் பின்னர் டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து ஓரம் கட்டிவிட்டு எடப்பாடி அணியும், ஓ.பி.எஸ். அணியும் ஒன்றாக இணைந்தது. ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னமும் கிடைத்தது.
அதே நேரத்தில் அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்கிற ஆதங்கம் கட்சியினர் மத்தியில் நிலவி வந்தது. கட்சிக்குள் எடப்பாடி அணியினரும், ஓ.பி.எஸ். அணியினரும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயே போட்டி போட்டு ஆர்வம் காட்டுவதாகவும் பேசப்பட்டது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் ஆர்.கே.நகரில் கடந்த மாதம் தேர்தல் நடந்தது.
அ.தி.மு.க. சார்பில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான மதுசூதனன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தினகரன் யாரும் எதிர்பாராத வெற்றியை பெற்றார். 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மதுசூதனன் தோல்வியை தழுவியது கட்சி தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தி.மு.க. வேட்பாளரான மருதுகணேஷ் டெபாசிட்டை இழந்து பரிதாபமான தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில் தனது தேர்தல் தோல்விக்கு ஜெயக்குமாரே காரணம் என்று மதுசூதனன் குற்றம் சாட்டி உள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அவர் 14 கேள்விகளை கேட்டு ஆவேச கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் எனது தோல்விக்கு அமைச்சர் ஜெயக்குமார்தான் காரணம் என்று குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மதுசூதனன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க.வில் தற்போது பொதுச் செயலாளர் பதவி இல்லை. சர்வ வல்லமை படைத்த அந்த பொறுப்பில் ஜெயலலிதா பல ஆண்டுகளாக கோலோச்சினார். அவரது மரணத்துக்கு பிறகு ஒன்றுபட்ட அ.தி.மு.க.வினர் கூட்டம் போட்டு இனி பொதுச் செயலாளர் பதவி அ.தி.மு.க.வில் இல்லை என்று தீர்மானம் நிறை வேற்றிவிட்டனர்.
இதனால் அவைத் தலைவர் பதவியே அதிகாரம் மிக்க பதவியாக உள்ளது. இந்த பொறுப்பில் மதுசூதனனே உள்ளார். எனவேதான் அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நானே நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார். இது
ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. மதுசூதனன் எழுதி உள்ள இந்த கடிதம் அ.தி.மு.க.வில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கடிதம் குறித்து இன்று பேட்டி அளித்த மதுசூதனன் கூறியதாவது;-
அதிமுக தன்னால் உருவாக்கப்பட்டது அதனால் அக்கட்சியின் மீது என்றும் அதிருப்தி அடையமாட்டேன். அதிமுக உருவானபோது, கருணாநிதியால் தண்டிக்கப்பட்டு தான் சிறையில் இருந்தேன். ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி தொடர்பாக தான் கடிதம் எழுதியது கட்சியின் உள்விவகாரம். கடிதம் கொடுத்தது தொடர்பாக கட்சியின் தலைமையிடம் தான் கேட்க வேண்டும் .அதிமுகவுக்கு ஒருபோதும் களங்கம் ஏற்படுத்த விரும்ப மாட்டேன் எனவும் மதுசூதனன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
#RKNagar #Madhusudhanan #AIADMK