கூடலூர், மார்ச்.26-
முதுகுளி-கூவக்கொல்லி இடையே ரூ.38 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நீண்டகால கோரிக்கை நிறைவேற்றி உள்ளதாக முதுமலை ஊராட்சி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சாலை வசதி இல்லாமல் அவதி
கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனம் என்பதால் ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் ஊராட்சிக்கு உட்பட்ட முதுகுளி, கூவக்கொல்லி, நம்பிக்குன்னு, கோழி மலை உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை சாலை வசதிகள் செய்யப்படாததால் மண் பாதைகளில் நடந்து சென்று வருகின்றனர். இதனால் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வாகனங்களில் செல்ல முடியாத நிலை இருந்தது. மேலும் நோயாளிகள், கர்ப்பிணிகளை மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்ல வேண்டியதாக உள்ளது.
ரூ.38 லட்சம் ஒதுக்கீடு
மழைக்காலங்களில் மண்பாதை சேறும், சகதியுமாக மாறி விடுவதால் பொதுமக்கள் படும் அவதியடைந்து வந்தனர். இதுதவிர கூவக்கொல்லி அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமப்பட்டனர். அவர்கள் நடந்து செல்லும் இடங்களில் வனவிலங்குகள் அச்சுறுத்தல்கள் உள்ளதால் எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. இதனால் முதுகுளி-கூவக்கொல்லி இடையே உள்ள மண் பாதையை தார்சாலையாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல ஆண்டுகளாக பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து முதுகுளியில் இருந்து கூவக்கொல்லி இடையே சாலை அமைக்க கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
சாலை பணி தொடக்கம்
இதைத்தொடர்ந்து சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, தாசில்தார் சித்தராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதரன், முதுமலை ஊராட்சி தலைவர் கோமதி, முதுமலை மறு குடியமர்வு மாவட்ட கமிட்டி நிர்வாகி சுரேஷ் உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.