ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த வழக்கில் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரி 4 ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான தீர்த்தராமன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், ஜெய்சங்கர், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முபாரக், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் சிவலிங்கம், விவசாயப் பிரிவு தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷங்கள்
இந்த போராட்டத்தின் போது பிரதமர் மோடியை கண்டித்தும், மத்திய அரசின் பழிவாங்கும் போக்கை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் 4 ரோடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை எடுத்து போலீசார் போராட்டத்தில் பங்கேற்றவர்களை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அண்ணா சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் ராமசுந்தரம், நகர தலைவர் வேடியப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் சண்முகம், மோகன் குமார், வட்டார தலைவர்கள் மணி, ஞானசேகர், பெரியசாமி, வேலன், சண்முகம், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.