சென்னை,
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.அன்பழகன், முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழக அரசால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 90 சதவீத ஆம்னி பஸ்கள் கடந்த ஒரு வருடமாக இயங்காமல் உள்ளது. இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரித்து, தற்போது உள்ள முழு ஊரடங்கால் 100 சதவீதம் ஆம்னி பஸ்கள் முற்றிலும் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஆகையால் தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பஸ்களுக்கு 2-வது காலாண்டு (ஏப்ரல், மே, ஜூன்) சாலை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் 3-வது காலாண்டு (ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர்) சாலை வரி 50 சதவீதம் வசூலித்து உதவி செய்ய வேண்டும். இந்த தொழில் சார்ந்த 2 லட்சம் பேர் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.