தமிழக செய்திகள்

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.12 ஆயிரம் கோடி இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் - ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையான ரூ.12 ஆயிரத்து 258 கோடியே 94 லட்சத்தை மத்திய அரசு விரைந்து வழங்கவேண்டும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

சென்னை,

41-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.

தமிழகத்தின் சார்பில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவருடன் நிதித்துறை கூடுதல் தலைமைசெயலாளர் எஸ்.கிருஷ்ணன், வணிகவரி ஆணையர் எம்.ஏ.சித்திக் ஆகியோரும் பங்கேற்றனர். அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசால் 2018-19-ம் ஆண்டிற்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு தொகையான ரூ.553 கோடியே ஒரு லட்சம், அதேபோல் 2019-2020-ம் ஆண்டு வழங்கவேண்டிய ரூ.246 கோடியே 56 லட்சம், 2020-21-ம் ஆண்டு கொடுக்கவேண்டிய ரூ.11ஆயிரத்து 459 கோடியே 37 லட்சம் என ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையாக மொத்தம் ரூ.12 ஆயிரத்து 258 கோடியே 94 லட்சம் வழங்க வேண்டி இருக்கிறது. இந்த தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்.

மேலும், 2017-18-ம் ஆண்டுக்கு தமிழகத்துக்கு வரவேண்டிய ஐ.ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையான ரூ.4 ஆயிரத்து 73 கோடியினையும் விரைந்து வழங்கவேண்டும். மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய இழப்பீட்டுத் தொகையினை தொடர்ந்து வழங்கும்பொருட்டு, மேல்வரி தொகுப்பு நிதியினை பெருக்குவதற்கான பிறவருவாய் ஆதாரங்களை கண்டறிய வேண்டிய முழுபொறுப்பு மத்திய அரசுக்குதான் உள்ளது.

தேவையெனில், ஜி.எஸ்.டி. இழப்பீடு மேல்வரி விதிப்பதற்கான காலக்கெடுவினை 5 ஆண்டுகளுக்கு மேலாக நீட்டித்து, சட்டத்திருத்தம் மேற்கொள்ள மத்தியஅரசு முன்வரவேண்டும்.

மேலும், மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடுவழங்க, ஜி.எஸ்.டி. மேல்வரி தொகுப்புநிதிக்கு மத்திய அரசு கடனாகவோ முன்பணமாகவோ வழங்கிடவேண்டும். இந்த கடனானது எதிர்வரவிருக்கும் மேல்வரி வரவினத்தில் ஈடுசெய்துகொள்ளலாம். இந்த பரிந்துரையினை ஜி.எஸ்.டி. மன்றமானது மத்தியஅரசுக்கு அளித்திடவேண்டும்.

தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாநிலங்களின் நிதிச்சுமை பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் பொருட்டு பிறசெலவினங்களை தமிழக அரசு குறைத்துக்கொண்டுள்ள சூழ்நிலையில், மேலும் மாநிலத்தின் நிதி ஆதாரங்களை விட்டுக்கொடுக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தின் நிதிஆதாரத்தினை மேலும் விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், மாநில அரசு செயல்படுத்தும் ஏழை, எளியோர்களுக்கான நலத்திட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே மாநிலங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டினை தொடர்ந்து வழங்கவேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் அவர் பேசினார்.

அதற்கு ஜி.எஸ்.டி. மன்றக்கூட்டம், தமிழக அரசுக்கு நிதி வழங்குவதற்கு தற்போது கஷ்டமாக இருக்கிறது. ரிசர்வ் வங்கியிடம் கடனாக பெற்று உங்களுக்கு வழங்கவேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்குகிறோம். மேல்வரியை வசூல்செய்து அந்த கடனை செலுத்திவிடுகிறோம் என்று தெரிவித்ததாகவும், அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார், முதல்- அமைச்சரோடு கலந்து ஆலோசித்தபிறகு தெரிவிப்பதாக கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...