சென்னை,
வழக்கில் சிக்கிய பட அதிபர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவர் ஆவார். இவர் மீது அமெரிக்க வாழ் தமிழர் விஜய் என்பவர் ஆன்லைன் மூலம், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
அதில் செயலி ஒன்றின் மூலம் ரவீந்தர் சந்திரசேகர் தனக்கு அறிமுகம் ஆனதாகவும், அந்த பழக்கத்தில் ரவீந்தர் சந்திரசேகர் கேட்ட ரூ.15 லட்சத்தை கடனாக கொடுத்ததாகவும், ஆனால் அந்த பணத்தை திருப்பி தராமல் அவர் ஏமாற்றி வருவதாகவும், அவர் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜய் தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
வழக்குப்பதிவு-ஆஜர்
அந்த புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார்கள். அதன்பேரில் ரவீந்தர் சந்திரசேகர், நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்னிலையில் ஆஜர் ஆனார்.
அப்போது பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக, ரவீந்தர் கூறியதாக தெரிகிறது. விசாரணை முடிந்து வெளியில் வந்த அவர், இன்னும் 3 நாட்களில் நல்ல முடிவு வந்துவிடும் என்று நிருபர்களிடம் கூறிவிட்டு சென்றார்.