சென்னை,
அரபிக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 21 பேர் கடந்த மாதம் வீசிய டவ்தே புயலில் சிக்கி காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், மயிலாடுதுறையைச் சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த 12 மீனவர்கள் இந்த புயலில் சிக்கி மாயமாகி உள்ளனர்.
அவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தக் கோரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டிருந்த அந்த மீனவ குடும்பங்களுக்காக தமிழக அரசு மொத்தம் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.