தமிழக செய்திகள்

ரூ.30 லட்சம் லஞ்சம்: கட்டாயப்படுத்தி போலீசார் கையெழுத்து நீதிபதியிடம் துணைவேந்தர் கணபதி முறையீடு

ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கட்டாயப்படுத்தி போலீசார் கையெழுத்து பெற்றனர் என்று நீதிபதியிடம் துணைவேந்தர் கணபதி முறையிட்டார்.

தினத்தந்தி

கோவை,

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றியவர் கணபதி. உதவி பேராசிரியர் பணி நிரந்தரத்துக்கு சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கணபதியையும், இடைத்தரகராக செயல்பட்டதாக பேராசிரியர் தர்மராஜையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கணபதியை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 12-ந் தேதி நீதிபதி அனுமதி அளித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராஜேஷ், தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் கனகசபாபதி, ஆறுமுகம் மற்றும் போலீசார் கணபதியை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். பல்கலைக்கழகத்தில் நடந்த பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் விதிமுறைகளை மீறி பலகோடி ரூபாய் சேர்த்ததாக எழுந்த புகார் குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் பதில் அளிக்கவில்லை.

அதுபோன்று துணைவேந்தர் பதவிக்கு வருவதற்கு முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு ரூ.2 கோடி லஞ்சமாக கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து கேட்டதற்கும் பதில் ஏதும் அவர் கூறவில்லை. இந்த ஊழல்களுக்கு யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டபோதும் அதில் சில கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதில் அளித்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாமல் மவுனமாகவே இருந்தார்.

ரூ.29 லட்சத்துக்கு வாங்கிய 4 காசோலைகள் குறித்து கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின் முரணான பதிலையே தெரிவித்தார். கடைசி வரையிலும் அந்த காசோலைகள் குறித்து கணபதி, போலீசாரிடம் எவ்வித தகவலையும் கூறவில்லை. இதனால் போலீசாரால் அந்த காசோலைகளை கைப்பற்ற முடியவில்லை.

கணபதியை போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கான நேரம் நேற்று மாலையுடன் முடிந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கோவையில் உள்ள லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது அவர் கையில் 2 பைகளை வைத்து இருந்தார். அதற்குள் துணிகள் இருந்தன.

நீதிபதி கேட்ட கேள்விகளும், அதற்கு கணபதி அளித்த பதில்களும் வருமாறு:-

நீதிபதி: போலீசார் உங்களை உடல் ரீதியாக தொல்லை படுத்தினார்களா?

கணபதி: போலீசார் எனக்கு உடல் ரீதியாக எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. ஆனால் மனரீதியாக நான் பல தொல்லைக்கு உள்ளானேன். இதனால் இரவு நேரத்தில் சரியாக தூங்கக்கூட முடியவில்லை. அதற்கு நீதிபதி, போலீஸ் விசாரணையில் மனரீதியான தொல்லை ஏற்படதான் செய்யும் என்றார்.

நீதிபதி: வேறு ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

கணபதி: நான் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சமாக பெற்றதாக போலீசார் என்னிடம் வாக்குமூலம் வாங்கி உள்ளனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

நீதிபதி: உங்களிடம் போலீசார் பதிவு செய்த வாக்கு மூலத்தை நீங்கள் முழுவதும் படித்து பார்த்தீர்களா?

கணபதி: முழுவதும் படித்து பார்க்கவில்லை. நான் உதவி பேராசிரியர் பணி நிரந்தரத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக என்னை போலீசார் கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி ஆவணங்களில் கையெழுத்து வாங்கி உள்ளனர் என்று முறையிட்டார்.

இதையடுத்து நீதிபதி ஜான்மினோ, கணபதியை வருகிற 2-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, இதே வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருக்கும் பேராசிரியர் தர்மராஜூக்கு நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிந்ததால், அவரை போலீசார் நேற்று காலையில் இந்த கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரையும் வருகிற 2-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஜான்மினோ உத்தரவிட்டார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது