சென்னை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் அருண் பரத் (வயது 24). கடந்த 2006-ம் ஆண்டு இவரை, மிரட்டல் புகார் குறித்து விசாரிப்பதற்காக அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
போலீஸ் நிலையத்துக்கு சென்றதும், வாகனத்தில் இருந்து இறங்கிய அருண் பரத், மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அருண் பரத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீகுமார் தாக்கியதில்தான் அருண்பரத் இறந்து போனதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அருண் பரத்தின் தந்தை டேவிட் இன்பராஜ், மனித உரிமை ஆர்வலர்கள் ராமச்சந்திரன், ஹென்றி டிபேன் ஆகியோர் மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. எனவே, அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை 3 மாதங்களில் முடித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க டி.ஜி.பி.க்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்.
அருண் பரத்தின் தந்தைக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க வேண்டும். இந்த தொகையை ஸ்ரீகுமாரிடம் இருந்து தமிழக அரசு வசூலித்துக்கொள்ளலாம்' என்று உத்தரவிட்டார்.